தமிழகத்தின் காவல் துறை மற்றும் போக்குவரத்துத்துறை இடையே கடந்த சில நாட்களாகவே, ‘நீயா? நானா?’ என்ற பிரச்னை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா போக்குவரத்துத் தறை செயலாளர் பணீந்திர ரெட்டியுடன் இன்று ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த செட்டிக்குளம் பணிமனையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற அரசு பேருந்தில் ஏறிய காவலர் ஆறுமுகப்பாண்டியிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி பேருந்தின் நடத்துநர் கேட்க, காவலர் ஆறுமுகப்பாண்டி, ‘தான் காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க வேண்டியதில்லை’ எனநடத்துநரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலனது. அதைத் தொடர்ந்து , ‘வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவலர்கள் இலவசமாக பயணிக்கலாம். மற்ற சமயங்களில் காவலர்களும் அவசியம் பயணச்சீட்டு வாங்க வேண்டும்’ என போக்குவரத்துத் துறை தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தது.
அதையடுத்து, காவல் துறையும் தனது பலத்தை காட்டும் விதமாக, சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளைக் காட்டி அரசு பேருந்துகளுக்கே அபராதம் விதிக்கத் தொடங்கினர். இந்த இரு துறை பிரச்னை பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில்தான் இன்று தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டியுடன் ஆலோசனை நிகழ்த்தி இருக்கிறார். சட்ட ரீதியாக போக்குவரத்து மற்றும் காவல் துறை இடையே நடந்துவரும் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காவல் துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இடையே நடந்துவரும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு இத்தனை பெரிய அக்கப்போரா’ என்று பொதுமக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.