

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், இதற்கு முன் இல்லாத மாற்றமாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாகப் புதிய கட்சியாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன் தலைவர் சி.ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.அவருடன் பல துறைகள் சார்ந்த அமைச்சர்களும் பதவியேற்று மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் முன்னணி திரைப்பட நடிகர் என்னும் காரணத்தினால், அவரை சுற்றி எப்போதும் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வருவதை ஏற்கனவே பல செய்திகள் மூலம் அறிந்துள்ளோம். அதேபோல், அவரது அமைச்சரவையில் தற்போது அமைச்சர்களாகப் பதவியேற்றவர்கள் பெரும்பாலோர் இளம் வயதினர் மற்றும் பலதரப்பட்ட துறைகள் சார்ந்தவர்கள் என்பதால், அவர்களை நேரில் கண்டு வாழ்த்து சொல்ல தினம்தோறும் வரும் கூட்டத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்களது அறைக்கு காவல்துறையால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் பெரும்பாலான அமைச்சர்களின் அறைகள் உள்ளன.
அங்கு புதிதாக பதவியேற்ற அமைச்சர்களை சந்திக்க தினமும் ஏராளமானோர் வருவதைக் கட்டுப்படுத்தவும் அவர்களின் விபரங்களை அறிந்து சந்திக்க முறைப்படுத்தவும் ஒவ்வொரு அமைச்சரின் அறைக்கு முன்பும் தற்போது 2 முதல் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த நடைமுறை செய்தியாளர்கள் மற்றும் பலருக்கும் ஆச்சரியம் தருவதாகவும் இதற்கு முன் இல்லாத வகையில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட இந்த புதிய நடைமுறை தற்போது தீவிரமாக அமலில் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் (திமுக, அதிமுக அல்லது அதற்கு முந்தைய ஆட்சிகளின் அமைச்சர்களுக்கும்) காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்துள்ளதாக குறிப்புகள் உள்ளன. இந்த காவல் பாதுகாப்பு அரசியல் கட்சி அடிப்படையில் இல்லாமல் பதவி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுவாகவே அமைச்சர்களின் வீடு, அலுவலகம், பயணம் ஆகிய இடங்களில் காவலர்கள் இருப்பார்கள்.தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறை அருகிலும் பாதுகாப்பு பணியாளர்கள் இருப்பது வழக்கம். முக்கிய துறைகள் வைத்திருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
சில அமைச்சர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மதிப்பீடு அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படவும் குறைக்கப்படவும் செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.முன்னாள் முதலமைச்சர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி காலங்களிலும் , கடந்த மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் செயலகம் மற்றும் அமைச்சர்களுக்கு பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு இருந்ததாகவும் அறியமுடிகிறது.
அமைச்சர்கள், உயரதிகாரிகள் பாதுகாப்பு ,முக்கிய அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகள் பாதுகாப்பு அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே செல்லாமல் கண்காணித்தல் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் சந்திப்பு நேரத்தை ஒழுங்குபடுத்துதல்அவசரநிலை அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கையாளுதல் போன்ற காரணங்களுக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் அல்லது ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருப்பார்கள்.
அதன் அடிப்படையிலேயே தற்போதைய அமைச்சர்களுக்கும் காவலர் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.