

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.3,000 வழங்கப்படடது. இதுவரை 90%-க்கும் மேற்பட்ட ரேஷன் காடுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சிலர் பொங்கல் பரிசுத் தொகையை வாங்காத காரணத்தால், ரேஷன் கடையில் அதனை வாங்கிக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகையை 500 ரூபாய் நோட்டுகளாகவே வழஙகியதால், மற்றொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு கார்டுதாரருக்கும் தலா ஆறு 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டதால், சில்லறை ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகையாக 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு சுமார் ரூ.6,453 கோடியை 500 ரூபாய் நோட்டுகளாகவே விநியோகம் செய்தது கூட்டுறவுத் துறை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது 500 ரூபாய் நோட்டுகளே அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் பலரும் கடைகளுக்குச் செல்லும் போதும், பயணத்தின் போதும் 500 ரூபாய் நோட்டுகளையே கொடுக்கின்றனர். இதனால் மீதி சில்லறை வழங்குவதில் வணிகர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வணிகர்கள் கூறுகையில், “சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு மளிகை கடையில் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வியாபாரம் நடக்கும். இதில் ஒரு நாளைக்கு 100 பேர் கடைக்கு வந்தால், அதில் 20 பேர் 500 ரூபாய் நோட்டுகளை தருவார்கள். மீதமுள்ள 80 பேர் 10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தருவார்கள். இதனால் சில்லறை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.
ஆனால் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது கடைக்கு வருபவர்களில் 90% முதல் 95% பேர் 500 ரூபாய் நோட்டுகளையை தருகின்றனர். இதனால் பலருக்கும் சில்லறை தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர ஆட்டோவில் பயணிக்கும் பொதுமக்களும் 500 ரூபாய் நோட்டுகளை கொடுப்பதால், ஓட்டுநர்கள் கடையில் வந்து சில்லறை கேட்கின்றனர்.
பொங்கல் பரிசுத் தொகையை 500 ரூபாய் நோட்டுகளாக கொடுத்ததால், தற்போது தமிழ்நாட்டில் 500 ரூபாய் நோட்டுகள் தான் அதிகளவு புழக்கத்தில் இருக்கின்றன. 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை சீராக இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை” என வணிகர்கள் தெரிவித்தனர்.
இந்திய அளவில் ஏற்கனவே 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றதற்குப் பிறகு தான் இந்தத் தட்டுப்பாடு அதிகரித்ததாக கூறப்படுகிறது. மேலும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அசசடிக்கும் விகிதமும் குறைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் தற்போது 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பது, இன்னும் சில நாட்களுக்கு சில்லறை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேலும் ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.