"நீ என்னை மணக்காவிட்டால் நான் பாதிரியார் ஆகி விடுவேன்" - போப்பின் காதல் கதை!
கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ், திங்கட்கிழமை தனது 88வது வயதில் பக்கவாதம் மற்றும் மீளமுடியாத இதய செயலிழப்பு காரணமாக விண்ணுலகம் சென்றார். போப் பிரான்சிஸ், போப் பதவியை ஏற்ற ஐரோப்பியர் அல்லாத லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். தனிப்பட்ட முறையில் போப் வாழ்க்கை முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார். தனிப்பட்ட குணங்களுக்காக மற்ற போப் பதவி வகித்தவர்களை விட சிறப்பானவவராக கருதப்படுகிறார்.
மக்கள் போப் மறைவை ஓட்டி அவரை பற்றிய, வாழ்க்கை நினைவுகளை, நினைவு கூர்ந்துள்ளனர். டிசம்பர் 17, 1936 அன்று அர்ஜென்டினா நாட்டில் உள்ள பியுனஸ் அயர்ஸில் நகரில் போப் பிரான்சிஸ் பிறந்தார். ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயர் தான் அவருக்கு சூட்டப்பட்டிருந்தது.
அவரது இளமைப் பருவ வாழ்க்கை குறித்த பல்வேறு கதைகள் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகின்றன. அவற்றில் ஒன்று அவரது அண்டை வீட்டாருடனான அவரது பருவ காதல் கதை. இந்த காதல் கதை ஒரு ஆச்சர்யம் மிகுந்த முடிவாக அனைவராலும் கருதப்படுகிறது. ஒருவேளை தனது எதிர்காலம் பற்றி அவருக்கு முன்பே தெரிந்து இருக்கக் கூடுமோ என்று கூட சந்தேகம் வருகிறது.
ஜார்ஜ் மரியோ தனது ஆரம்பகால வாழ்க்கையை பியுனஸ் அயர்ஸில் கழித்தார். வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற அவர் பல்வேறு பணிகளை செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் ரசாயன ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் இரவு விடுதி பவுன்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார்.
இளமைக் காலத்தில் அவர் தனக்கு என்று ஒரு குடும்பம் வேண்டும் என்று நினைத்தார். "சொர்க்கம் மற்றும் பூமியில்" மற்றும் "கடவுளின் பெயர் கருணை" போன்ற புத்தகங்களில், மற்றும் உரையாடல்களில் இதை வெளிப்படுத்தியுள்ளர்.
ஜார்ஜ் மரியோ தனது இளமை பருவத்தில் காதல், திருமணம், குடும்பம் ஆகியவற்றில் அதிக நம்பிக்கைக் கொண்டிருந்தார். திருமணம் செய்துக் கொண்டு ஒரு குடும்பத்தை உருவாக்கி மகிழ்ச்சியுடன் வாழவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது வாழ்க்கையை காதல் புரட்டி போட்டது. அதனால் இளமை பருவத்தில் மிகுந்த மனவேதனையை அனுபவித்தார். அதன் பின்னர் அவர் மதம் சார்ந்த நம்பிக்கையில் தீவிரமனார்.
இளம் வயதில் ஜார்ஜ் மரியோவுக்கு பியூனஸ் அயர்ஸில் உள்ள மெம்ப்ரிலர் தெருவில், 4 வீடுகள் தள்ளி வசித்து வந்த அமலியா டெமோன்டே மீது காதல் வந்தது. காதலியுடன் வசிக்க ஒரு அழகான சிறிய மர வீட்டையும் அவர் கட்டி வைத்திருந்தார். ஒரு நாள் ஒரு காதல் கடிதம் எழுதி அதை அமெலியாவிற்கு கொடுத்தார். அந்த காதல் கடிதத்தில் "நீ என்னை மணக்காவிட்டால் நான் பாதிரியார் ஆகி விடுவேன்" என்று எழுதி இருந்தது. அமெலியாவின் பெற்றோர் கண்டிப்பானவர்கள் என்பதால் அவள் ஜார்ஜின் காதலை ஏற்கவில்லை. மேலும் அமெலியாவின் பெற்றோர்கள் ஜார்ஜின் காதல் சின்னமாக இருந்த மர வீட்டையும் இடித்து தள்ளினர்.
இதன் பின்னர் சில காலம் ஏதோதோ பணிகளை செய்து வந்த ஜார்ஜ் மரியோ திடீரென்று இறைவழி சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஒரு நாள் அவர் பாதிரியாராக மாறினார். இறுதியில் கிறிஸ்தவ மதத்தின் மிக உயர்ந்த பதவியான போப் பதவியையும் அடைந்தார். அவரது பெயரையும் பிரான்சிஸ் என்று மாற்றிக் கொண்டார்.