

தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டத்தில் தம்பதியர் ரூ.9 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், 7.4% வட்டி விகிதத்தில் மாதம் ரூ.5,550 வரை உறுதியான வருமானத்தைப் பெறலாம்.
தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களை பொருத்தவரை, பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானம் என்பதால், பல கோடி இந்தியர்களின் முதல் தேர்வாக உள்ளது என்றே சொல்லாம். அதேபோல் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாக விளங்குகின்றன.
எனவே எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய பொருளாதார அடித்தளத்தை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் சிறந்த தேர்வாகும்.
குறிப்பாக, ஓய்வு பெற்ற முதியவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தபால் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டத்தை (Monthly Income Scheme - MIS) செயல்படுத்தி வருகிறது.
அரசு உத்தரவாதம் கொண்ட இந்த சேமிப்பு திட்டத்தில், தம்பதியர் இணைந்து தங்களால் முடிந்த ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் கணிசமான தொகையை மாதந்தோறும் வருமானமாகப் பெற முடியும் என்பதால் இந்த திட்டம் தம்பதியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டு நிலவரப்படி, உங்கள் பணத்தை (Monthly Income Scheme - MIS)முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதற்கான விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே, நாம் முதலீடு செய்யும் அசல் தொகைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், அதற்கான வட்டியை ஒவ்வொரு மாதமும் வருமானமாகப் பெற முடியும் என்பதாகும்.
பல முன்னணி வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதத்தை விட அதிகமாக இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு (டெபாசிட்) செய்யும் பணம் அப்படியே இருக்கும்.
இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் டெபாசிட் செய்த நாளிலிருந்து, வட்டித் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.இதனாலேயே பலரும் இந்த திட்டத்தில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தனிநபராக இந்த திட்டத்தில் சேர்வதால் கிடைக்கும் பலனை விட, கணவன்-மனைவி இணைந்து கூட்டுக் கணக்கைத் (Joint Account) தொடங்குவதன் மூலம் இத்திட்டத்தில் அதிகப்படியான பலன்களைப் பெறலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக மூன்று பேர் வரை கூட இணையலாம் என்பதால் அப்படி கூட்டுக் கணக்கைத் தொடங்கும்போது ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தின் காலம் முடிவடைந்த பிறகு, நீங்கள் முதலீடு செய்த முழு அசல் தொகையும் உங்களுக்குத் திரும்பக் கிடைத்துவிடும்.
நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து உங்கள் மாத வருமானம் மாறுபடும்.
உதாரணமாக, கணவன் - மனைவி இணைந்து கூட்டுக் கணக்கில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால், அவர்களுக்கு 7.4 சதவீத வட்டி விகிதத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.2,467 வருமானமாகவும், ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.5,550 வருமானமாகவும், அதுவே அதிகபட்ச வரம்பான ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.9,250 வருமானமாக ஈட்ட முடியும் என்பதால் இது ஒரு நிலையான ஓய்வூதியம் போன்ற உணர்வை அவர்களுக்கு தரும். எனவே, ஒரு குடும்பம் அதிகமாக சம்பாதிக்க விரும்பினால், ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதன் மூலம் அவர்களுக்கு மாதத்திற்கு 9,250 ரூபாய் வருமானமாக ஈட்ட முடியும்.
பாதுகாப்பான முதலீட்டின் மூலம் தங்களது அன்றாடத் தேவைகளைச் சமாளிக்க விரும்பும் குடும்பங்களுக்கும், பெண்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இந்த தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.