

தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் (Post Office Savings Schemes) இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட, அதிக வட்டி மற்றும் வரிச் சலுகை கொண்ட சிறந்த முதலீட்டுத் தேர்வுகளாகும். PPF, சுகன்யா சம்ரித்தி (SSY), மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS), RD மற்றும் நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (NSC) போன்றவை பிரபலமானவை. இவை 4% முதல் 8.2% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களை பொருத்தவரை, பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானம் என்பதால், பல கோடி இந்தியர்களின் முதல் தேர்வாக உள்ளது என்றே சொல்லாம். எனவே எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய பொருளாதார அடித்தளத்தை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் சிறந்த தேர்வாகும்.
2026-ம் ஆண்டு நிலவரப்படி, உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்கான விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
செல்வமகள் சேமிப்பு (SSY):
பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் மகளின் எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்பினால், இதுவே மிகச்சிறந்த திட்டமாகும். பெண் குழந்தைகளின் நன்மைக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு மிக அதிகபட்சமாக 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இதிலும் PPF போன்றே முழுமையான வரி விலக்கு உண்டு. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் என்றாலும், 15 ஆண்டுகள் வரை மட்டுமே நாம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு அரசு வட்டித் தொகையைத் தொடர்ந்து கணக்கில் சேர்த்துக்கொண்டே இருக்கும். 21-வது ஆண்டில் முதிர்வுத் தொகை கிடைக்கும் போது அது உங்கள் மகளின் உயர்கல்வி அல்லது திருமணத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்.
தபால் நிலைய கால வைப்பு நிதி (Time Deposit):
தபால் நிலையத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என நான்கு கால அளவுகளில் டெபாசிட் செய்யலாம் என்றாலும் 5 ஆண்டு கால வைப்பு நிதிக்கு மட்டுமே 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
மற்ற திட்டங்களுக்கு வரிச் சலுகை கிடையாது. மேலும், இதில் கிடைக்கும் வட்டிக்கு உங்கள் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் வரி செலுத்த வேண்டும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF):
தபால் நிலைய திட்டங்களிலேயே தற்போது PPF திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்து '80சி' பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். இதன் சிறப்பம்சமே இதிலுள்ள 'EEE' அந்தஸ்துதான். அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் தொகை, அதற்கு கிடைக்கும் வட்டி மற்றும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் முதிர்வுத் தொகை என மூன்றுக்குமே ஒரு பைசா கூட வரி கட்டத் தேவையில்லை என்பதால் பலரின் விருப்பத் தேர்வாக இந்த திட்டம் உள்ளது என்று சொல்லலாம்.
தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS):
மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு POMIS திட்டம் மிகவும் ஏற்றது. தனி நபர் கணக்கில் 9 லட்சமும், கூட்டுக் கணக்கில் 15 லட்சமும் முதலீடு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் மாதந்தோறும் வருமானமாக பெற முடியும்.
ஆனால், இதில் முதலீடு செய்யும் தொகைக்கோ அல்லது மாதாமாதம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கோ எந்த வரிச் சலுகையும் கிடையாது என்பது கூடுதல் சிறப்பாகும். இந்த வருமானம் 'இதர ஆதாரங்கள்' மூலம் வரும் வருமானமாகக் கருதப்பட்டு முழுமையாக வரிக்கு உட்பட்டது. அதாவது POMIS திட்டத்தின் மூலம் உங்களுக்கு சீரான வருமானம் கிடைக்கும்.. ஆனால் வரி விலக்கு இல்லை!
தேசிய சேமிப்பு பத்திரம் (NSC):
5 ஆண்டுகள் லாக்-இன் கொண்ட இந்தத் திட்டத்திற்கு 7.7% வட்டி கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முதல் நான்கு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் வட்டி மீண்டும் முதலீடு செய்யப்படுவதாகக் கருதப்பட்டு, அதற்கும் '80சி' பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். ஐந்தாவது ஆண்டு வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்பதுடன் இதற்கு உச்ச வரம்பு ஏதும் கிடையாது என்பதும் இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP):
உங்கள் பணத்தை 115 மாதங்களில் (சுமார் 9.5 ஆண்டுகள்) இரட்டிப்பாக்க விரும்பினால் கிசான் விகாஸ் பத்ரா சிறந்த தேர்வாகும். இதற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், இதில் முதலீடு செய்யும் போது வரி விலக்கு கிடையாது;
முதிர்வு காலத்தின் போதும் வரிச் சலுகை கிடையாது. வருடாந்திர வட்டி வருமானம் உங்கள் வரி வரம்பிற்கு உட்பட்டது. அதாவது இந்த திட்டத்தின் மூலம் உங்களது பணம் இரட்டிப்பாகும் என்றாலும் இதற்கு வரி விலக்கு கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 60 வயதைக் கடந்தவர்களுக்கு SCSS திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில் இந்த திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுவதுடன், 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு மற்றும் வட்டி வருமானத்தில் '80TTB' பிரிவின் கீழ் கூடுதலாக 50,000 ரூபாய் வரை வரி விலக்கும் பெற முடியும். இருப்பினும், வட்டி வருமானம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டினால் டி.டி.எஸ் (TDS) பிடிக்கப்படும்.
தபால் துறையில் உள்ள ஒவ்வொரு திட்டங்களும் ஒவ்வொரு வகையில் பலன் அளிக்கக்கூடியவை. அந்த வகையில் முழுமையான வரி விலக்கு தேடுபவர்களுக்கு PPF மற்றும் SSY சிறந்தவை. அதேபோல் அதிக வட்டி மற்றும் வரிச் சலுகை இரண்டையும் எதிர்பார்க்கும் மூத்த குடிமக்களுக்கு SCSS ஏற்றதாகும். எனவே உங்கள் எதிர்கால நலன் கருதி உங்களுக்கான சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் நிச்சயம் நல்ல இலாபத்தை ஈட்ட முடியும்.