

மத்திய, மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து அதை சிறப்பாக செயல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் மாநில அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்ற திட்டத்தை ஆரம்பித்து கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளைக் கட்டித் தருகிறது.
அதேபோல் மத்திய அரசும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்கிறது. இதில் வீட்டு வசதி இல்லாதவர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களுக்கு வீடு கட்ட உதவும் வகையில் செயல்படும் திட்டம் "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana 2.0)". இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறம் (PMAY-U) மற்றும் கிராமப்புறங்களில் (PMAY-G)வீடுகள் கட்ட நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் குடிசைகள் மற்றும் பாழடைந்த வீடுகளில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2016-ம் ஆண்டு நம் நாட்டின் ஒவ்வொரு ஏழைகளுக்கும் வீடு கிடைக்கச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது.
2024-ம் ஆண்டின் செப்டம்பர் 1-ம் தேதிக்கு பிறகு சொத்து வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு வீட்டு கடனை பெற்ற தனிநபர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் வீட்டு கடனில் 4 சதவீதம் வரை மானியத்தை பெற முடியும். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். அதாவது 2024 செப்டம்பர் 1-ம்தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
PMAY-U 2.0 திட்டத்தின் கீழ், தகுதியுள்ள நபர்களுக்கு ரூ.35 லட்சம் அல்லது அதற்கும் குறைவான கடன்களுக்கு 4% வட்டி மானியம் வழங்கப்படுகிறது ரூ.8 லட்சம் வரை கடன் தொகையுடன். இந்த மானியம் 12 ஆண்டுகள் வரையிலான கடன் காலத்திற்கு பொருந்தும். கூடுதலாக, பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சம் நிதி உதவி கிடைக்கும், இது 5 வருட தவணைகளில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் வீடு பெற, சில நிபந்தனைகள் உள்ளது.
PMAY திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:
* பல்வேறு வருமான பிரிவுகளை சேர்ந்த தனி நபர்கள், SC/ST பிரிவினர், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
* விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
* வீடு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்; 2 அறைகள் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
* முதற்கட்டமாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய அதாவது ஆண்டு வருமானம், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதாவது செல்லத்தக்க அரசின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
* மானியத்திற்கு தகுதி பெற, பயனாளிகள் வருமானச் சான்றுகளை வழங்குவது அவசியம்.
* இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் கிராமப்புற அல்லது நகர்ப்புற அரசாங்க வீட்டு வசதி திட்டத்தின் மூலம் எந்தவித பலன்களையும் பெற்றிருக்கக் கூடாது.
தேவைப்படும் ஆவணங்கள் :
ஆதார் அட்டை
தொலைபேசி எண்
புகைப்படம்
பயனாளியின் வேலை செய்வதற்கான அட்டை
வங்கி பாஸ் புக்
ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண்.
விண்ணப்பிப்பது எப்படி?
* முதலில் 'PMAwasYojana' என்ற https://pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் `Awaassoft' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
* அதில் 'சிட்டிசன் அசஸ்மென்ட்' என்ற பகுதியை கிளிக் செய்து, நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்து கொண்டு திட்டத்தின் வழிகாட்டுதல் குறித்தும் கவனமாக படிக்க வேண்டும்.
* அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய முகவரி, வருமானம் மற்றும் ஆதார் உள்ளிட்ட உங்களது அனைத்து வகையான விவரங்களையும் உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும்.
* அதன் பின் நமது விண்ணப்பம் ஏற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டு வரும். அதை அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
* விண்ணப்பித்த பின்னர் பயனாளிகளின் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம்.
வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் இந்த ஆவணங்களுடன் அருகே உள்ள இ சேவை மையத்தில் பதிவு செய்யலாம்.