

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
முதல்முறையாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை மற்றும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ம்தேதி தொடங்கி கடந்த 6-ம்தேதியுடன் முடிந்தது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 4,633 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 2,460 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும் வரும் 15-ம்தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய தாள் (பேலட் பேப்பர்) அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 16-ம்தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘பேலட் பேப்பர்’ ஒட்டும் பணி மேற்கொள்ளப்படும்.
இளம்சிவப்பு(பிங்க்) வண்ணத்தில் உள்ள அந்த ‘பேலட் பேப்பரில்’ முதலில் வரிசை எண், வேட்பாளரின் பெயர், அடுத்ததாக வேட்பாளரின் வண்ணப்புகைப்படம், அவருக்கான தேர்தல் சின்னம் ஆகியவை தெளிவாக அச்சிடப்பட்டு உள்ளன.
‘பேலட் பேப்பரில்’, வேட்பாளரின் பெயர்களை அகர வரிசையில் தேர்தல் கமிஷன் வரிசைப்படுத்தும். அதை 4 பிரிவுகளாக தேர்தல் கமிஷன் பிரித்துள்ளது.
முதலாவது, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் வேட்பாளரின் பெயர்கள், அகர வரிசையில்(அந்தந்த மாநில மொழியில்) வரிசைப்படுத்தப்படும்.
2-வதாக, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் வேட்பாளரின் பெயர்கள் வரிசைப்படுத்தப்படும்.
3-வதாக அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்படும்.
4-வதாக சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்படும்.
கடைசி பெயராக ‘நோட்டா’(யாருக்கும் வாக்களிக்கவில்லை) இடம்பெறும்.
அகர வரிசைக்காக, பெயர்களின் முதல் எழுத்தே கருத்தில் கொள்ளப்படும். அடைமொழியின் முதல் எழுத்தோ அல்லது இனிஷியலோ கணக்கில் எடுக்கப்படாது.