

ஏடிஎம் இயந்திரங்களின் வருகைக்குப் பிறகு, பணம் எடுக்க வங்கிகளில் கால் வலிக்க வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. இன்று பெரும்பாலான பொதுமக்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரம் ஏடிஎம் மூலமாகவும் பண மோசடிகள் நடக்கின்றன.
சமீபத்தில் கூட முதியவர் ஒருவருக்கு ஏடிஎம்-மில் பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி, பணத்தை சுருட்டி உள்ளார் ஒரு மர்ம நபர். இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது நாம் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு முன்பாக, கேன்சல் பட்டனை 2 முறை அழுத்தினால் ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பரவி வருகிறது.
இருப்பினும் இது உண்மைத் தகவலா அல்லது வதந்தியா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இந்நிலையில் இது குறித்த அதிகாரப்பூர அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தில் கேன்சல் பட்டனை அழுத்துவதன் மூலம், ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என்பது முற்றிலும் தவறான தகலல் என மத்திய அரசின் ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தக் குழு மேலும் கூறுகையில், “பரிவர்த்தனையை பாதியில் முடிக்கவும், தவறான உள்ளீடுகளை கொடுத்த பிறகு பரிவர்த்தனையை ரத்து செய்யவும் தான் ஏடிஎம் இயந்திரத்தில் கேன்சல் பட்டன் இருக்கிறது. பரிவர்த்தனைக்கு முன்பாக கேன்சல் பட்டனை அழுத்துவதன் மூலம், ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என்பது தவறான தகவலாகும். இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் ஏடிஎம் இயந்திரங்கள் அதிக அளவில் வந்துவிட்டன. ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க சில பொதுவான குறிப்புகளைத் தொடரந்தே பின்பற்றினாலே போதும் என்கிறது ரிசரவ் வங்கி.
1. முதலில் உங்கள் ஏடிஎம் கார்டை வேறு யாரிடமும் கொடுக்க வேண்டாம்.
2. ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் போது கையை வைத்து மறைத்துக் கொண்டு, பின் நம்பரை உள்ளிடவும்.
3. ஏடிஎம் பின் நம்பரை யாருடனும் பகிர வேண்டாம். வங்கிகள் உங்களை போன் கால் மூலம் தொடர்பு கொண்டு வங்கி விவரங்களை எப்போதும் கேட்க மாட்டார்கள். அப்படி ஏதேனும் அழைப்புகள் வந்தால் அதனை நிராகரித்து விட வேண்டும்.
4. கார்டின் பின்புறம் பின் நம்பரை எழுதி வைக்க வேண்டாம். ஒருவேளை கார்டு தொலைந்து விட்டால், அதில் இருக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லை.
5. ஏடிஎம் இயந்திரம் மற்றும் ஸ்லைப்பிங் செய்யும் இடத்திற்கு அருகில் ஏதேனும் சிறிய பொருள்கள் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். சந்தேகம் படும்படியான பொருட்கள் இருந்தால் உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தவும்.
6. உங்கள் வங்கிக் கணக்கில் உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் பரிவர்த்தனைகள் நிகழ்ந்தால், உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தவும்.
7. ஏடிஎம்-மில் பணம் எடுத்து முடித்தவுடன் கேன்சல் பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் பரிவர்த்தனை முடிந்ததை உறுதி செய்து கொள்ளலாம்.