

வீடு அல்லது மனை போன்ற சொத்துக்களை பத்திர பதிவு செய்யும் முறையில் தமிழக அரசு பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த விதிகள் நில ஒப்பந்தங்களை பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், மோசடி இல்லாததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நீங்கள் நிலம், வீடு அல்லது மனையை வாங்கவோ விற்கவோ திட்டமிட்டிருந்தால், இந்த புதுப்பிப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்தி கொள்வது மிகவும் அவசியம்.
முன்னதாக, சொத்துக்களை பத்திர பதிவு செய்யும் போது பெரும்பாலும் முழுமையற்ற அல்லது தவறான ஆவணங்களுடன் கூட நடந்துள்ளது. ஆனால் இது பின்னர் பல சட்ட மோதல்களுக்கும் மோசடி வழக்குகளுக்கும் வழிவகுத்தது. இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவே, அரசாங்கம் பதிவு செயல்முறையை கடுமையானதாக மாற்றியுள்ளது.
மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், இனிமேல், முழுமையான மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாமல் சொத்துக்களை பதிவு செய்வது இப்போது சாத்தியமற்றது. அந்த வகையில் இந்த 5 ஆவணங்கள் இல்லாமல் இனிமேல் சொத்தை பதிவு செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த புதிய 5 விதிகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...
* தற்போது சொத்தை பத்திர பதிவு செய்யும் போது அடையாள சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சொத்தை பத்திர பதிவு செய்யும் போது, வாங்குபவரும் விற்பவரும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை, அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை தங்கள் அடையாளச் சான்றாக வழங்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் அடையாள சான்று விவரங்கள் பதிவு அலுவலகத்தில் உள்ள தரவுகளுடன் பொருந்தினால் மட்டுமே பத்திர பதிவு செய்யப்படும். இவற்றில் ஏதேனும் ஒன்று பொருந்தவில்லை என்றாலும் கூட, பத்திர பதிவு உடனடியாக நிறுத்தப்படும்.
* பத்திர பதிவுக்கான செயல்முறை தொடங்குவதற்கு முன்பு சொத்தை வாங்குபவர்கள் முழு முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி ஆன்லைன் கட்டண ரசீதும் அவசியம். கடந்த காலங்களில், சிலர் வரிகளைக் குறைப்பதற்காக சொத்தின் மதிப்பை குறைத்து காட்டி குறைந்த அளவில் பதிவு கட்டணங்களை செலுத்தி முறைகேடு செய்து வந்தனர். இந்த மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
* வீடு, மனை அல்லது நிலம் அதிகாரப்பூர்வ அரசாங்க பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் நிலத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ அல்லது நீதிமன்ற வழக்கில் இருந்தாலோ அல்லது ஏதேனும் அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தாலோ அந்த சொத்தை பதிவு செய்ய முடியாது.
* சில சொத்துக்களுக்கு, தடையில்லாச் சான்றிதழ் (NOC) கூடுதலாக தேவைப்படும். அதாவது நாம் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் நிலம் நகராட்சி பகுதிக்குள், மேம்பாட்டு ஆணைய மண்டலத்தில் அல்லது தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்தால், தடையில்லாச் சான்றிதழ் (NOC) தேவைப்படலாம். இத்தகைய குறிப்பிட்ட நிலங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் இல்லாமல் அத்தகைய நிலம் அல்லது சொத்தை பத்திர பதிவு செய்ய முடியாது.
* 50,000 ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு கட்டாயம். அந்த வகையில் சொத்துக்களை விற்பனை செய்யும் போதோ அல்லது வாங்கும் போதோ அதிகளவு பணப்புழக்கம் நடைபெறும் என்பதால் பத்திர பதிவு செய்வதற்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்க முடியும் என்பதால் அரசாங்கம் இந்த நடைமுறையை கட்டாயமாக்கி உள்ளது.
- நீங்கள் சொத்தை பத்திர பதிவு செய்வதற்கு முன்பு, அந்த சொத்து குறித்து ஏதேனும் முரண்பாடுகள் இருப்பதாக உணர்ந்தால், சட்ட நிபுணர்களை அணுகி சந்தேகத்தை தீர்த்து கொள்வது நல்லது. பத்திர பதிவு முறையில் தமிழக அரசு கொண்டு வந்ததுள்ள இந்த புதிய விதிகள் கடினமாக தோன்றினாலும், வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் பாதுகாக்க இவை மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.