

இந்தியாவில் 7,000-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் 532 ரெயில் நிலையங்கள் உள்ளன. அதில் தினமும் லட்சக்கணக்கான ரெயில்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் தேவைக்காவும், ரெயில் நிலையங்களில் உணவு, தண்ணீர், புத்தகங்கள், செய்தித்தாள்கள், பொம்மைகள் மற்றும் பாரம்பரியப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான கடைகள் உள்ளன.
இதுபோன்ற சூழ்நிலையில், ரெயில்வே பிளாட்பாரத்தில் அமைந்துள்ள டீ-ஸ்நாக்ஸ் கடைகள் மற்றும் ரெயில்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால், பல உள்ளூர் கடைக்காரர்கள் மற்றும் புதிய இளம் தொழில்முனைவோர் ரெயில்வேயில் வியாபாரம் செய்ய நினைக்கின்றனர்.
மேலும் ரெயில் நிலையத்தில் சில கடைகளை அமைக்க, இந்திய ரெயில்வேயின் (IRCTC) சம்பந்தப்பட்ட பிரிவிடமிருந்து உரிமம் அல்லது அனுமதி பெற வேண்டும். உணவுக் கடைகளை திறக்க, விண்ணப்பம் மற்றும் தேவையான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
அதேநேரம், சில நேரங்களில், ரெயில்வே வாரியம் நேரடியாக கடைகளை அமைப்பதற்கான நிதியை ஒதுக்குகிறது. இதன்மூலம் இந்திய ரெயில்வே நேரடியாக நாட்டில் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அந்த வகையில் தெற்கு ரெயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அங்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் ‘கியூஆர்கோடு' மூலம் புகார் செய்யும் புதிய வசதியை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சென்னை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உணவகங்களிலும் குறைகளை பதிவு செய்யும் வகையில் முதன் முறையாக ‘கியூஆர்கோடு' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரெயில்வே கோட்டம், ரெயில் மதத் செயலியுடன் இணைந்து ‘கியூஆர்கோடு' புகார் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய கியூஆர்கோடு வசதியில் புகார்கள் அல்லது உணவகங்கள் குறித்த கருத்துகளை பயணிகள் பதிவு செய்யலாம். உணவகங்களில் அதிக கட்டணம், சேவைக் குறைபாடு, உணவின் தரம், அளவு, உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காதது, சுகாதார நிலை குறித்த விவரங்களை இதில் பதிவிடலாம். உணவக கியூ ஆர்கோடை பயணிகள் செல்போனில் ஸ்கேன் செய்யலாம். அதில் உணவக இருப்பிடம், நிலையக்குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும்.
அத்துடன் இந்திய ரெயில்வேயின் பயணிகள் குறை தீர்ப்பு செயலியான ரெயில் மதத் வசதிக்குள் தானாகவே உள்நுழையும். அதில் தங்களது செல்போன் எண்ணைக் குறிப்பிட்டதும், குறுஞ்செய்தி (ஓ.டி.பி.) வரும்.
அதன்பின், புகாரின் வகையைத் தேர்ந்தெடுத்து, ஒரு சுருக்கமான விளக்கத்தை அளித்து சமர்ப்பிக்கலாம். பின்னர், ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன் கூடிய ஒப்புகைச் செய்தி, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உடனடியாக அனுப்பப்படும். இதையடுத்து, புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.