இனி மருந்துக் கடைகளில் QR CODE கட்டாயம் - மத்திய அரசு அதிரடி..!
பொதுவாக மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு அதன் பக்க விளைவுகளை பற்றி விவரம் இருப்பதில்லை. சில நேரங்களில் சில மாத்திரைகள் சிலருக்கு ஒவ்வாமையும் இருக்கும் .ஒவ்வொரு உடலின் ஆரோக்கியத்திற்கு தகுந்த மாதிரி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் மருந்துகளின் பக்க விளைவுகளை மருத்துவர் மட்டுமே அறிந்து இருப்பார். மத்திய அரசாங்கத்தின் புதிய அறிவிப்பின் படி , அனைத்து மக்களும் தங்கள் வாங்கும் மருந்துகளின் பக்க விளைவுகளை பற்றி அறிந்துக் கொள்ள , மருந்துக் கடைகளில் கியூ.ஆர். குறியீடு(QR CODE ) கட்டாயம் வைக்க வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைப் படுத்தியுள்ளது.
இதன்படி குடி மக்களின் ஆரோக்கியம் , பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை உறுதி செய்யும் வகையில் , நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களிலும், மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் கியூ.ஆர். குறியீட்டை வைக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறையை பற்றி மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை தலைவர் ராஜிவ்சிங் ரகுவன்ஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மருந்து நிறுவன கண்காணிப்பு திட்டத்தின், செயற்குழு கூட்டம் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நோக்கம் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து , மருந்து பாதுகாப்பு செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று , ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதகமான விளைவுகளை பற்றிய தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய விதியின் கீழ் தற்போது நாடு முழுக்க உள்ள ஒவ்வொரு மொத்த விற்பனை மருந்தகத்திலும், சில்லரை விற்பனை மருந்துக் கடைகளிலும் , மருத்துவமனையில் உள்ள மருந்தகங்களிலும், பயனாளர் கண்களில் படும்படியான முக்கியமான இடத்தில் கியூ.ஆர் குறியீட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்க படுகிறது.
இந்த கியூ.ஆர். குறியீட்டை மக்கள் தங்களது போன் மூலம் ஸ்கேன் செய்தால் , குறிப்பிட்ட மருந்தின் பக்க விளைவுகள் பற்றியும் , முன்னெச்சரிக்கைகள் பற்றியும் , அதை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட அத்தியாவசியமான பாதுகாப்பு விபரங்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். மேலும், பக்கவிளைவுகள் ஏற்பட்டால் புகார் அளிக்க வேண்டிய உதவி எண்களும் இந்தத் தகவல்களுடன் கொடுக்கப்படும்
இதற்கு முன்னர் மருந்தகங்களின் கடமை நோயாளிக்கு மருந்து வழங்குவதுடன் முடிந்துவிடுகிறது. இனி ஒவ்வொரு மருந்து குறித்த எச்சரிக்கையையும் , அதன் பயன்பாட்டையும் அறிந்துக் கொண்டு பொது மக்கள் முழுமையான விழிப்புணர்வை பெறுவார்கள். இது ஒவ்வொரு மருந்தகங்களில் கடமையாகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தார்மீக பொறுப்பாகவும் இருக்கிறது. இந்த விதிமுறை ஒருவர் சுய மருத்துவம் செய்து கொள்வதை முற்றிலும் கைவிடுவதற்கும் , தவறான மருந்து பயன்பாட்டினால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட உதவும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உத்தரவை நடைமுறைபடுத்த நாட்டின் , அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று ராஜிவ்சிங் ரகுவன்ஷி அறிவுறுத்தியுள்ளார். மேலும் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருந்தகங்களில், கியூ.ஆர். குறியீடு மற்றும் உதவி எண்களை முக்கிய இடத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கைகளை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

