டெல்லி முதல் சென்னை வரை: ராகுல் காந்தியின் அதிரடி அரசியல் நகர்வுகள்!

ராகுல் காந்தி வரும் ஆகஸ்ட் 1-ம்தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாகவும், காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்துப் புதிய உற்சாகத்தை வழங்கும் வகையில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Updated on

இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் இணைந்து மாணவர்கள் நடத்திய நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் அதிக கவனம் பெற்றது. இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கிய நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மாணவர்களுக்கு ஆதரவாக நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளதன் மூலம் மாணவர்கள் கோரிக்கை ஓரளவு வெற்றி பெற்றது. எனினும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் மாணவர்களும் அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நீட் விவகாரம் மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து நாடாளுமன்றத்திலும், டெல்லியிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் ராகுல்காந்தி.

குறிப்பாக மாணவர் போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார். ஜூலை 20ம் தேதி தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த பேரணியில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் புல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

பேரணியின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறையினரின் ஒடுக்குமுறை குறித்து விளக்கம் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘மாணவர்கள் மற்றும் அமைதியான முறையில் போராடியவர்கள் மீதான இந்த ஒடுக்குமுறை ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். மாணவர்கள் நியாயமான மற்றும் பொறுப்புள்ள கல்வி முறையைக் கோரினர். அவர்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினர் கொடிய ஆயுதங்கள் மற்றும் கண்ணீர்ப்புகை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர். மாணவிகளும் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.

அவர்கள் மீது புல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் தேசியத் தலைநகர் டெல்லியில் பாதுகாப்புப் படை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. உள்துறை அமைச்சராக, மாணவர்கள் மீது புல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடிய தாக்குதல் முறைகளைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புதல் அளித்தீர்களா?. இல்லையென்றால், யார் ஒப்புதல் அளித்தது? மாணவர்களைத் தடிகளால் தாக்கும் சீருடை அணியாத நபர்கள் காவல்துறையினரா அல்லது வெளி நபர்களா? இத்தகைய கொடூரமான நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும் இதற்கான பதிலை கோருகின்றனர்’ என்று பல கேள்விகள் எழுப்பியுள்ளார்.

மேலும் மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையில் நடத்தியதாக கூறப்படும் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி நீட் தேர்வு முறைகேடு விவகாரம், நாடாளுமன்றப் போராட்டங்களுடன் வரவிருக்கும் தமிழகப் பயணம் தொடர்பான முக்கியச் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Delhi violence |நீட் போராட்டம்
Delhi riots|நீட் போராட்டம்India today

ராகுல் காந்தி வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாகவும், காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்துப் புதிய உற்சாகத்தை வழங்கும் வகையில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக உடன் கூட்டணியில் பயணித்த காங்கிரஸ் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றி தவெக கட்சியுடன் இணைந்தது அரசியல் வரலாற்றில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற போது அவரது அழைப்பின் பேரில் ராகுல்காந்தி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் தற்போது மேற்கொள்ளவிருக்கும் அவரது தமிழ்நாடு பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த பயணம் குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு எங்கள் அன்புத் தலைவர், ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது.

இதையும் படியுங்கள்:
டெல்லியில் வெடித்த காங்கிரஸ் போராட்டம்: பிரதமரை பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தீவிர முழக்கம்!
ராகுல் காந்தி

அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.

தமிழ்நாடு மக்கள் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!” எனக் குறிப்பிட்டிருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பாஜகவும் RSS-ம் அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானவர்கள்- ராகுல்காந்தி கடும் தாக்கு..!
ராகுல் காந்தி

இந்தியாவில் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடாளும் தகுதி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வரும் வாய்ப்பு உள்ளது என்று காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை வெற்றி பெறுமா என்பதை ராகுல் காந்தியின் அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகள் தீர்மானிக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

logo
Kalki Online
kalkionline.com