

மார்ச் 5 ஆம் தேதி , தமிழகத்திற்கு வரும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி , அன்றைய தினமே கூட்டணியை உறுதிப் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் , தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சி பிரதிநிதிகள் உடன், தமிழகத்தில் தேர்தல் நடத்துவதை பற்றி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நாள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கென்று ஒரு கூட்டணியில் இணைந்து விட்டாலும் , முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி எங்கு இணையப் போகிறது என்ற குழப்பம் நிலவுகிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடங்கிய காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாக்கூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் திமுகவை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து வந்தனர். கூட்டணி உறவுகள் மோசமாவதை கண்ட தமிழக காங். தலைவர் செல்வபெருந்தகை , தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை சந்தித்து இதுபற்றி முறையிட்டார்.
அதன் பின்னர் , திமுக மீதான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியினர் தவிர்த்தாலும் , திமுக தனது கோவத்தினை வெளிப்படுத்த தொடங்கியது. திமுகவை பொருத்தவரை அதன் கொள்கை "மத்தியில் கூட்டாட்சி , மாநிலத்தில் சுயாட்சி" என்பதாகும். நீண்ட காலமாக திமுக இதை கடைபிடித்து வருகிறது. முன்னர் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைத்த போது கூட, ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கியது இல்லை. தற்போது காங்கிரஸ் அமைச்சரைவில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது, மறுபுறம் திமுக எதையும் கண்டுகொள்ளாமல் மெகா கூட்டணி அமைத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் , தற்போது தமிழக வெற்றி கழகத்துடனும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதைப் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் இருந்து 30 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதற்கு , திமுக சம்மதித்த நிலையில் போனஸாக ஒரு ராஜ்யசபா சீட்டையும் அவர்களுக்கு கொடுக்க சம்மதித்துள்ளது. ஆனால் , ஆட்சியில் பங்கு என்பதில் திமுக இசைவு தெரிவிக்க வில்லை.
இதே நேரம் , ராகுல் காந்தியின் தேர்தல் வியூக அமைப்பாளர்கள் சிலர் விஜயுடன் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு பற்றி ஆலோசிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. தவெகவை பொறுத்தவரை விஜய் கூட்டணியில் உள்ள உள்ளவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார். ரகசியமாக பேச்சுவார்த்தையில் நடத்தி வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது தொகுதி பங்கீடு பற்றி பேசி உள்ளனர். தவெக கொடுத்த உத்தேச தொகுதி பட்டியலையும் காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் "திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க எங்களை அழைக்கவில்லை, தவெக எங்களுடன் கூட்டணி பேச வெளிப்படையாக அழைத்துள்ளனர் " என்று ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அவரது இந்த பேச்சு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
கிரிஷ் சோடங்கர் பேச்சிற்கு காங்கிரசின் விஜய் வசந்த் எம்.பி மறுப்பு தெரிவிக்கும் விதமாக , இது அவரது சொந்த கருத்து மட்டுமே , காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல என்று தெரிவித்துள்ளார். செல்வப் பெருந்தகை கிரிஷ் சோடங்கரின் கருத்துக்கள் திரிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி தமிழகம் வருவதற்கு முன்னதாகவே கூட்டணி பற்றி உறுதியான தகவல்கள் முடிவாகும் , அவர் வரும் போது கூட்டணிக் கட்சியுடன் இணைந்து பிரச்சாரம் தொடங்க முன்னேற்பாடுகளை உருவாக்குவார் என்று கூறப்படுகிறது.