

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், இன்று காலை பனையூரில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியிருந்தார். அதோடு நேற்று நேரில் ஆளுநரை சந்தித்தும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று விஜய் பதவியேற்க இருந்த சூழலில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு இன்று கேரளாவிற்கு செல்லவிருந்த ஆளுநரின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்காமல் இருப்பது, தவெக-வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாட தவெக முடிவெடுத்துள்ளது.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் நேற்று ஆதரவளித்தது. இந்நிலையில் ஆளுநர் அழைப்பு விடுக்காததை எதிர்த்து, இன்று உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தவெக இந்த வழக்கை உச்சம் மன்றத்தில் எடுத்து நடத்த முன்னணி வழக்கறிஞர்களையும் ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
1989 இல் கர்நாடகாவில் எஸ்.ஆர்.பொம்மை தலைமையில் ஜனதா தளம் அரசு ஆட்சி செய்தது. அப்போது கட்சியில் இருந்த சில எம்எல்ஏ-க்கள் வேறு கட்சிக்கு மாறியதால், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது எனக் கூறி, ஆளுநர் சட்டமன்றத்தை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எஸ்.ஆர்.பொம்மை. இந்த வழக்கில் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி மட்டுமே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனவும், தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது எனவும் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்டு, தவெக உச்சநீதிமன்றத்தில் வாதாட முடிவெடுத்துள்ளது
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் இன்னும் ஆட்சி அமையாத சூழலில், உச்சநீதிமன்றத்தை நாட தவெக முடிவெடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் தவெக ஆட்சி அமைப்பதை எவ்வகையிலும் திமுக தடுக்காது எனவும், திமுக அரசின் மகத்தான திட்டங்களை தவெக தலைவர் விஜய் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.