

உத்தரப்பிரதேசத்தின் பரோட்டில் உள்ள 'ஸ்பந்தன் மருத்துவமனை'யின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் பிரக்யா தோமர், தனது மருத்துவமனையிலிருந்து ஒரு வீடியோவை பகிர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர், ஏற்கனவே ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில், தனது குடும்பத்தினர் தொடர்ந்து மற்றொரு ஆண் குழந்தையை விரும்புவதால், தற்போது ஆறாவது குழந்தையைச் சுமப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஆண் குழந்தைக்காக, மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பது ஒரு பெண்ணின் உடல்நலத்தின் மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.
மருத்துவமனைக்கு வந்த அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் பிரக்யா தோமர் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறி, அப்பெண்ணின் விவரங்களை கேட்டுள்ளார். டாக்டரிடம் செக்கப்புக்கு வந்தபோது இந்த பெண் பேசுவது வீடியோவாகவும் வெளியாகி உள்ளது..
அந்த வீடியோவில், ‘அந்த பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருக்கிறதாம்.. 5 குழந்தைகள் இருக்கும்போது எதற்காக 6-வது குழந்தை?’ என்று டாக்டர் கேட்கிறார்.
அதற்கு அப்பெண், ‘தாங்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், திருமணம் நடந்தபோது தனக்கு சுமார் 15 அல்லது 16 வயதுதான் ஆகியிருந்தது என்று அப்பெண் மருத்துவரிடம் கூறினார். பின்னர் அவர், தனது மூத்த குழந்தைக்கு எட்டு வயதாவதாகவும், தனக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் என் கணவர் மற்றும் குடும்பத்தினரும் இன்னொரு ஆண் குழந்தை வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றவே நான் 6-வது முறையாகக் கர்ப்பம் தரித்திருக்கிறேன்’ என்று சாதாரணமாக சொல்கிறார்.
இவ்வளவு இளம் வயதிலேயே இத்தனை முறை கர்ப்பமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டாக்டர் தோமர், அவர்கள் ஏதேனும் கருத்தடை முறைகளைப் பின்பற்றுகிறார்களா என்றும், ஏன் தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்றும் விசாரித்துள்ளார்.
அதிகக் குழந்தைகள் இருந்தால், எதிர்காலத்தில் குடும்பத்திற்குச் சம்பாதித்துத் தரக்கூடிய கைகள் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் பேச்சை கேட்டு கோபமடைந்த டாக்டர், அந்தப் பெண்ணை எச்சரித்ததுடன், இளம் வயதில் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து தம்பதியினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் அந்தப் பெண் தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட கடும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதை மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
அந்தத் தம்பதியிடம் அடுத்தடுத்த கர்ப்பங்களுக்கு இடையே போதிய இடைவெளி இருந்திருக்க வேண்டும் என்று கூறிய டாக்டர், அப்பெண்ணின் உடல்நலத்தை ஆபத்துக்குள்ளாக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
"ஒரு ஆண் குழந்தையை விரும்பி, ஒருவரின் உயிரையே ஆபத்துக்குள்ளாக்குவது நியாயமா?" என்று டாக்டர் தோமர் தனது பதிவின் தலைப்பில் குறிப்பிட்டிருந்தார்.
போதிய விழிப்புணர்வு இருந்தும் கூட சில பெண்கள் இளம் வயதிலேயே, அதிக குழந்தைகளை தொடர்ச்சியாக பிரசவிக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகளவில் நடப்பது வேதனையை தருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, இதுவரை கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. அத்துடன் முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.
அந்த வீடியோ சமூக ஊடகப் பயனர்களிடையே பலவிதமான எதிர்வினைகளைத் தூண்டியது; அவர்களில் பலர் கணவரின் கருத்துகளை விமர்சித்ததுடன், அப்பெண்ணின் நல்வாழ்வு குறித்துத் தங்கள் கவலையையும் வெளிப்படுத்தினர்.
‘உங்கள் குடும்பத்திற்கு உணவு, இருப்பிடம் மற்றும் உடை ஆகிய அடிப்படைத் தேவைகளையே உங்களால் வழங்க முடியாதபோது, வம்சத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது எதற்காக?’ என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்;
மற்றொரு பயனர், ‘அந்த மனிதருக்கு அப்பெண் மீது துளியளவும் மரியாதையோ அல்லது அன்போ இல்லை,’ என்று பதிவிட்டார்.
21ஆம் நூற்றாண்டில் இந்தியா உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்த நிலையிலும், ஆண் வாரிசு மோகத்திற்காக ஒரு பெண்ணின் உயிரோடு விளையாடும் இத்தகைய சம்பவங்கள் வட மாநிலங்களில் தொடர்ந்து அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது...!!