

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணி சற்று பலமாகவே இருக்கிறது. ஆனால் புதிதாக களத்தில் இறங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைய, இன்னும் எந்த கட்சியும் முன் வரவில்லை.
இருப்பினும் முன்னணி கட்சிகளின் நிர்வாகிகள் தவெக-வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தேமுதிக, ஓபிஎஸ் தரப்பினர் மற்றும் பாமக (ராமதாஸ்) ஆகியோர் மட்டுமே இன்னும் எந்தக் கட்சியிலும் கூட்டணி சேராமல் உள்ளனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைய விரும்புவதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு அதிமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்கக் கூடாது என அன்புமணி தரப்பில் சொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ராமதாஸுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய் தான். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பாமக நிறுவனர் ராமதாஸை தவெக-வில் இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருகிறார்.
இன்னும் ஓரிரு நாட்களில் ராமதாஸை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார் செங்கோட்டையன். தேமுதிக மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் இன்னும் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்காத நிலையில், ராமதாஸ் - செங்கோட்டையன் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை இறுதி செய்த பின்னரே கூட்டணியில் இணைவோம் என பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேமுதிக எந்த கட்சியில் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் ஓபிஎஸ் தரப்பினர் பலரும் அவரை விட்டுப் பிரிந்து மற்ற கட்சிகளில் சேர்ந்து விட்டதால், அவரும் தவெக-வில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கருதப்டுகிறது
கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில், கூட்டணிக்கு எந்த கட்சியும் வராத நிலையில் தனித்து போட்டியிடும் வகையில் தலைவர் விஜய் பேசினார். ஆனால் தற்போது தவெக கூட்டணியில் ராமதாஸ், ஓபிஎஸ் மற்றும் தேமுதிக இணைந்தால், அக்கட்சிக்கு மிகப்பெரும் பலம் கிடைத்து விடும்.
ராமதாஸ் ஆதரவாளர்களும் தவெக கூடடணியில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதால், அடுத்த சில நாட்களில் தவெக கூட்டணி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.