

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவிய மரத்துவர் ஐயா ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன்படி இனி பாமக கட்சியின் அனைத்து முடிவுகளையும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தான் எடுப்பார் என அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசியல் துறவறம் மேற்கொண்ட ராமதாஸ், இனி தினசரி பொதுமக்களை சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்தில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு பலகை இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்னை சந்திக்க வரும் பொதுமக்கள் யாரும் அரசியல் பேச வேண்டாம் என ஏற்கனவே அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது தைலாபுரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
தைலாபுரம் தோட்டத்தில் அரசியல் துறவறம் என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் தன்னை சந்திக்கலாம் எனவும் அந்த பேனரின் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பேனரில் சமூக நீதிக்காக போராடிய தமிழினப் போராளி மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள், அரசியல் துறவறம் மேற்கொண்ட காரணத்தால் மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவுசெய்து அரசியல் குறித்து பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர் அய்யா ராமதாஸை பார்க்க வருபவர்கள் நலம் விசாரிக்கவும், மரியாதை நிமித்தமாகவும் மட்டுமே சந்திக்க வேண்டும். அவரிடம் கூட்டணி, தேர்தல் அல்லது அரசியல் கட்சி உள்விவகாரங்கள் உள்ளிட்ட அரசியல் குறித்து யாரும் விவாதிக்கவோ, பேசவோ கூடாது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் மயங்கி விழுந்த போது, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வயதைக் காரணம் காட்டி இனி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
உடல்நலனைக் கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகினார் ராமதாஸ். மேலும் தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பணிச்சுமையை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகப் பணிகள், முக்கிய அரசியல் முடிவுகள் மற்றும் தேர்தல் கள வியூகங்களை தலைவர் அன்புமணி ராமதாஸ் கவனித்து வருகிறார். தேர்தலுக்கு முன்பு அன்புமணி தலைமையில் ஓர் அணியும், ராமதாஸ் தலைமையில் ஓர் அணியும் தனித்னியாக செயல்பட்டது.
தேர்லுக்குப் பிறகு தந்தையும், மகனும் ஒன்று சேர்ந்த நிலையில் பாமக கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் நடைமுறைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.
தந்தையும், மகனும் ஒன்று சேர்ந்தது, ராமதாஸ் தரப்பில் இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தியை அளித்தது. மேலும் ராமதாஸ் தரப்பில் இருந்த முன்னாள் எம்எல்ஏ அருள் தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கட்சி நிர்வாகிகளை ஒன்றிணைத்து 2029 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையுடன் களம் காண அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் பலத்தைக் காண்பிக்க அன்புமணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.