

இந்திய அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஐஐடி தகுதித் தேர்வும் ஒன்று. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் பிறந்தது முதலே 90% உடல் பாதிப்புடன் அவதிப்படும் மாணவர் சந்தோஷ் ஐஐடி மெட்ராஸ் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
உடலளவில் பாதிப்பு இருந்தாலும், எதனையும் பொருட்படுத்தாமல், அயராத உழைப்பின் மூலம் இன்று ஐஐடி மெட்ராஸில் படிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கி இருக்கிறார் 17 வயதான சந்தோஷ். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகனான சந்தோஷ்க்கு பிறக்கும் போதே Cerebral Palsy என்ற பாதிப்பு இருந்தது.
பெரும் சவால்களுக்கு மத்தியில் படித்த சந்தோஷ், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார்.
மாணவரின் கனவு அதோடு முடிந்து விடவில்லை. ஐஐடி தகுதித் தேர்வுக்கு பயிற்சி பெற்று, தற்போது தேர்ச்சியும் பெற்றுள்ளார். ஐஐடி மெட்ராஸில் BS Data Science படிப்பை தேர்வு செய்துள்ளார் மாணவர் சந்தோஷ்
மிகக் கடுமையான உடல் உபாதைகள் மற்றும் எழுதுவதிலும், அமர்வதிலும் உள்ள நடைமுறை சவால்கள் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல், தொடர் பயிற்சி மற்றும் முயற்சியால் ஐஐடியில் சேர்ந்துள்ளார் மாணவர் சந்தோஷ்.
தேசிய அளவில் மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் ஐஐடி மெட்ராஸ் தகுதித் தேர்வில், தனது அறிவாற்றலால் தேர்ச்சி பெற்று இடம் பிடித்துள்ளார். மாணவரின் அயராத உழைப்புக்கு உறுதுணையாக இருந்த பெற்றோரின் அர்ப்பணிப்பும், தியாகமும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.
சந்தோஷை தொடர்ந்து கவனித்துக் கொண்டு, பள்ளிக்கும், தேர்வு மையங்களுக்கும் அழைத்துச் செல்வது வரை தேவையான வசதிகளை அமைத்துக் கொடுத்து பெற்றோர் தூணாக நின்றது முக்கியமானது.
உடல் பாதிப்புகளைக் கடந்து, இலக்கை நோக்கி மட்டுமே செயல்படும் மன உறுதி இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு மாணவர் சந்தோஷின் வெற்றி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மிகவும் எளிய குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர் மாணவர் சந்தோஷ். சிறு வயதில் இருந்தே தசைச் சிதைவு சார்ந்த பாதிப்பினால் 90% உடல் அசைவுகளை இழந்து, சக்கர நாற்காலியின் துணையோடு இயங்கி வருகிறார் சந்தோஷ்.
கை விரல்களை அசைப்பதும், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும் இவருக்கு பெரும் வலியைத் தரும். இருப்பினும் புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் வழியாக கணிதம் மற்றும் கணினி அறிவியலை கற்று வந்தார்.
எதிர்கொண்ட சவால்கள்:
* பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவதில் சிரமத்தை மேற்கொண்டார்.
* எழுதுவதற்கே விரல் அசைவுகள் மிகவும் குறைவாக இருந்ததால் மிவும் சிரமப்பட்டார்.
* இதனை ஈடுசெய்ய கணினி மற்றும் டிஜிட்டல் திரைகளை அதிக நேரம் சிரமப்பட்டு பயன்படுத்தினார்.
* கடுமைய உடல் வலிகளுக்கு நடுவிலும் தினசரி பல மணிநேரம் படித்தார்.
மாணவரின் இலக்கு:
கணினி மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் சிறந்து விளங்கி, வருங்காலத்தில் தொழில்நுட்பத்தின் வழியாகப் தன்னைப் போல் சிரமப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் மற்றும் செயலிகளை உருவாக்குவதே மாணவர் சந்தோஷின் உயரிய நோக்கமாகும்.