

நமது நாட்டை பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், மன்னர்கள் என ஆட்சி செய்து உள்ளனர். அதில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொண்டைமான் மன்னர்கள் ஆட்சி செய்தனர். நாடு சுதந்திரம் அடைந்ததும் அனைத்து சமஸ்தானங்களும் அரசுடன் இணைக்கப்பட்டபோது தங்களது கருவூலத்தில் இருந்த பொன்னையும் பொருளையும் அப்படியே அரசுக்கு ஒப்படைத்த பெருமை புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு உண்டு.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ மாதாவும் தற்போதைய கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் தாயாருமான ராணி ரமாதேவி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 85. ராணியின் உடல் மருத்துவமனையில் இருந்து புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ராணி ரமாதேவி தொண்டைமானின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார். அவரது இரங்கல் செய்தியில், ‘புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமான் அவர்களின் மனைவியார் ராணி திருமதி ரமாதேவி அவர்கள், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்திய தகவலறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறி இருக்கிறார்.