

தொழில்நுட்ப வசதிகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ள அதேவேளையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பண மோசடிகளும் நடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் பண மோசடியால் இந்திய மக்கள் ரூ.1,000 கோடிக்கும் மேல் இழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சைபர் கிரைம் துறை மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், புதுப்புது வழிகளில் ஆன்லைன் பண மோசடிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இருட்டில் இருந்து கொண்டே நமக்கு பணத்தாசையைக் காட்டி ஏமாற்றி விடுகிறார்கள். எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்பதில் இந்த மோசடி கும்பல் அதிதீவிரமாக சிந்திப்பது முற்றிலும் உண்மை.
சமீபத்தில் கூகுள் ரிவ்யூ, யூடியூப் வீடியோக்களைப் பார்த்தால் பணம் கிடைக்கும் என்ற புதிய வகை மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடிக்கு வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக தான் மக்களை அணுகுகிறார்கள். சமூக வலைதளங்கள் வழியாக பகுதிநேர வேலை என்ற விளம்பரம் தான் இந்த மோசடியின் அடிப்படையாக உள்ளது.
ஒரு லிங்கை அனுப்பி 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து நல்ல விதமாக ரிவ்யூ எழுதினால் ரூ.200 முதல் ரூ.300 வரை சம்பளம் கிடைக்கும் என்ற பாணியில் இந்த மோசடி தொடங்குகிறது. ரிவ்யூ எழுதி அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்ப வேண்டும்.
மக்களை நம்ப வைக்க முதல் 2 ரிவ்யூக்கு பணத்தை அனுப்பி விடுவார்கள். அதற்குப் பிறகு யூடியூப் வீடியோவை பார்த்தால் பணம் கிடைக்கும் என வீடியோ லிங்கை அனுப்புவார்கள். அதை பார்த்த பிறகு பணம் கிரெடிட் ஆகி விடும். இதற்கு அடுத்த படியாக முதலீடு செய்தால் தான் அடுத்த ரிவ்யூவை எழுத முடியும் என நம்மை நம்பகமற்ற தளங்களில் முதலீடு செய்ய வைப்பார்கள்.
முதலில் நாம் செய்யும் சிறிய முதலீட்டுக்கு இருமடங்கு பணம் கிடைக்கும் எனச் சொல்வார்கள். சொன்னபடியே சில மணி நேரங்களில் சிறிய முதலீட்டுக்கு லாபத்துடன் பணம் வந்து விடும். நாமும் நம்பிக்கையான நிறுவனம் தான் என நம்பி அடுத்தடுத்து முதலீடு செய்வோம். இந்நேரத்தில் தான் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்தால், அதுவும் சிலமணி நேரங்களில் இருமடங்காகும் என்று கூறுவார்கள். நாமும் அதனை நம்பி முதலீடு செய்தால், அந்தத் தொகை திரும்ப வராது.
லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, முதலீட்டு பணத்தைத் திரும்பக் கேட்டால், கூடுதலாக பணம் செலுத்தினால் தான் முந்தைய பணம் கிடைக்கும் என நம்மை மோசடியில் சிக்க வைத்து விடுவார்கள். இல்லத்தரசிகள் முதல் தொழில் செய்பவர்கள் வரை இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1 மாதத்தில் மட்டும் இவ்வகை மோசடியில் 20-க்கும் மேற்பட்டேர் சுமார் 1 கோடி ரூபாய் வரை இழந்துள்ளனர்.
மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?
* தொடக்கத்தில் கிடைக்கும் சிறய லாபத்தை நம்பி ஏமாற வேண்டாம். பொதுவாக ஒரு வேலையில் பணம் சம்பாதிக்க, பணம் கட்ட சொல்வது தவறான செயல். அப்படி யாரேனும் சொன்னால் நீங்கள் உடனே அந்த வேலையை நிராகரிக்க வேண்டும்.
* நம்முடைய கணக்கு முடக்கப்பட்டு விட்டது. மீண்டும் பணத்தை கட்டினால் தான் மொத்த பணமும் கிடைக்கும் என்று சொன்னால் அது முற்றிலும் மோசடி தான்.
* டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் வழியாக மட்டுமே தகவல் தொடர்பு இருக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பணத்தை இழந்தால் என்ன செய்ய வேண்டும்?
* நீங்கள் பணத்தை இழந்து, ஏமாற்றப்பட்டது உங்களுக்கு தெரிய வந்தால் உடனே 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை அழைத்து புகார் அளிக்க வேண்டும்.
* டெலிகிராம், வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ், யுபிஐ பரிவர்த்தனை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
* உடனே வங்கியைத் தொடர்பு கொண்டு சமீபத்திய பரிவர்த்தனைகளை முடக்குமாறு கோரிக்கை வைக்கவும்.
பணத்தை ஏமாந்து விட்டு புலம்புவதற்கு பதிலாக உடனடியாக நாம் எடுக்கும் இந்த நடவடிக்கைகள், பணம் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். அதோடு நம்மைப் போல் பிறர் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.