

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் ஆதார் கார்டு மிகவும் முக்கியமான தனிநபர் அடையாள அட்டையாக இருக்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டையை இணைக்கும் போது, இரண்டிலும் பதிவாகி உள்ள கைரேகை ஒன்றாக பொருந்த வேண்டும். அப்போது தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்.
மின்னனு ரேஷன் கார்டு அறிமுகமானதற்கு பிறகு, குடும்பத் தலைவர் கைரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கி வந்தனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ரேஷன் கார்டில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவுத் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கைரேகை பதிவு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்வதன் மூலம், கார்டில் பெயர் உள்ளவர்களில் யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிச் செல்ல முடியும். இதன் மூலம் ரேஷன் கடையில் பொருள்கள் தவறான நபருக்கு செல்வது தடுக்கப்படும்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில் “ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக கைரேகை பதிவு செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து விட்டு, கைரேகை பதிவு செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்கள் குறித்த அறிக்கையை உடனடியாக கூட்டுறவுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே, பொருள்களின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது இறந்தவர்களின் அறிக்கையை கூட்டுறவுத் துறை கேட்டுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் ரேஷன் கார்டில் ஆதார் கார்டை இணைத்து விட்டனர். இருப்பினும் ஒரு சிலர் இன்னும் இணைக்காத காரணத்தால் தான், தற்போது கூட்டுறவுத் துறை இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்வது எப்படி?
* ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.
* ரேஷன் கடை ஊழியரிடம் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என கூறினால், அவர் உங்களுடைய ரேஷன் கார்டு அட்டையை e-PoS இயந்திரத்தில் வைத்து, ஆதார் எண்ணை உள்ளிடுவார்.
* பிறகு நீங்கள் கைரேகையை வைக்க வேண்டும்.
* ஆதாரில் உள்ள கைரேகையுடன் இது பொருந்தினால், ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யப்படும்.
உங்களுடைய ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைத்த பிறகு கைரேகையை பதிவு செய்ய முடியும். ஒருவேளை இன்னமும் நீங்கள் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால், ரேஷன் கடை ஊழியரிடம் அதுகுறித்த தகவல்களைக் கூறி இணைத்தல் வேண்டும்.