

நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டை பயனாளர்கள் இலவச அரிசி மற்றும் மானிய விலை பொருட்களை தொடர்ந்து தடையின்றி பெற, ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வரும் ஜூலை 31-க்குள் ரேஷன் கடைகளில் e-KYC விரல்ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான இந்திய மக்கள் ரேஷன் அட்டை பயனாளர்களாக உள்ளனர். இந்த அட்டையைப் பயன்படுத்தி, அரசின் பொது விநியோகத் திட்டத்திலிருந்து (PDS) குறைந்த விலையில் உணவுப் பொருட்களையும் மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் வாங்குவது எளிதாவதாலும் இதன் மூலம் பல சலுகைகள் அரசிடமிருந்து கிடைப்பதாலும் இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமாக தேவைப்படுகிறது . தற்போது, ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை, அதாவது 'உங்கள் வாடிக்கையாளரை மின்னணு முறையில் அறிந்துகொள்ளுங்கள்' (Know Your Customer) என்பதை, முடிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்துகிறது.
ரேஷன் கார்டு இ-கேஒய்சி (e-KYC) என்றால் என்ன :
மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு (E-KYC) என்பது, ரேஷன் அட்டை வைத்திருப்பவரின் அடையாளத்தைச் சரிபார்க்க ஒரு எளிய ஆன்லைன் முறையாகும். இந்தச் செயல்பாட்டில், நமது ஆதார் அட்டையை ரேஷன் அட்டையுடன் இணைக்க வேண்டும். பின்னர், அடையாளத்தை உறுதிப்படுத்த, நமது கைரேகைகள் அல்லது பிற பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தப்படுகிறது. யாருக்குப் பலன்கள் கிடைக்கும் என்பது குறித்த சரியான தகவல்கள் அரசாங்கத்திடம் இருப்பதை இது உறுதி செய்கிறது.
இ-கேஒய்சி (E-KYC) மோசடியைத் தடுக்கிறது, போலி அட்டைகளை நீக்குகிறது, மேலும் அரசாங்கம் பங்கீட்டுப் பொருட்களை மிகவும் எளிதாக வழங்க உதவுகிறது.
ரேஷன் கார்டு இ-கேஒய்சி-யின் முக்கிய நன்மைகள் என்ன தெரியுமா :
சரியான பயனாளரின் விபரங்களை உறுதி செய்கிறது. மோசடியான கோரிக்கைகளையும் போலி ரேஷன் அட்டைகளையும் தடுக்கிறது.
தடையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது .மானிய விலையில் உணவு தானியங்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு இது கட்டாயமாகிறது.
ரேஷன் கார்டுதாரர்கள், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் இ-கே.ஒய்.சி. விரல் ரேகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. .ஆகவே இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுடன் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஜூலை 31க்குள் கைரேகை பதிவு செய்ய வேண்டும். மேலும் இ-பிஓஎஸ் (e-POS) இயந்திரத்தில் கைரேகை அல்லது விழித்திரை பதிவு மூலம் இ-கேஒய்சி முடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வெளியூரில் வசிப்பவர்கள் என்ன செய்யலாம் :
ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் பணி நிமித்தமாக வெளியூரில் தற்காலிகமாக வசிப்பவர்கள் ரேஷன் கார்டு இ-கேஒய்சி (e-KYC) செய்ய, அவர்கள் இருக்கும் இடத்திலேயே உள்ள நியாயவிலைக் கடை அல்லது ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தலாம். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளியூர்களில் உள்ள கடைகளிலும் கைரேகை சரிபார்ப்பு செய்யப்படுகிறது
தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பதியும் வசதியும் உள்ளது என்பதால் தவறாமல் வெளியூரில் இருந்தாலும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள எந்த ரேஷன் கடைக்குச் ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டுகளை உடன் எடுத்துச் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம். அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது பொது சேவை மையங்களை அணுகி ஆதார் எண் சரிபார்ப்பு மூலமும் முடிக்கலாம்.
உறுப்பினர் பெயர் நீக்கும் முறை :
இறந்த உறுப்பினர்களின் பெயர்களை ஜூலை 25க்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் தங்களது பகுதியில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதார் கார்டின் நகலை வழங்க வேண்டும். அதேபோல் கைரேகை இல்லாத குழந்தைகள், முதியோர்கள் முதலில் தங்கள் ஆதார் கார்டில் கைரேகை, கண் பதிவை புதுப்பித்த பின்பே இ-கே.ஒய்.சி., செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்கள் எப்படி செய்வது?
மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலக் குறைவு அல்லது இயலாமை காரணமாக நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், சம்பந்தப்பட்ட விற்பனையாளரைத் தொடர்புகொள்ளலாம். அத்துடன் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத பயனாளிகளுக்கு, விற்பனையாளர்கள் அவர்களது இல்லங்களுக்கே நேரில் வந்து பயோமெட்ரிக் சரிபார்ப்புப் பணியை நிறைவு செய்து தருவார்கள் என்பது சிறப்பு.
ஏன் கட்டாயம் செய்யவேண்டும் இ-கேஒய்சி :
போலி கார்டுகளை தவிர்க்கவும் தகுதியற்றவர்களை நீக்கவும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் உடனடியாக விரல்ரேகை பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர் நீக்கம் போன்ற பணிகளை கட்டாயமாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கான AAY ரேஷன் அட்டை மற்றும் PHH எனப்படும் முன்னுரிமை பெறும் தகுதியான குடும்பங்களுக்கான ரேஷன் அட்டை பிரிவுகளை சேர்ந்த ரேஷன் அட்டை பயனாளிகள், எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தோடர்ந்து பலன்களை பெற ஜூலை 31 ஆம் தேதிக்குள் இந்த பணியை செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இ-கேஒய்சி செய்யவில்லை என்றால் என்னவாகும் :
இ-கேஒய்சிக்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதி ரேஷன் கடைக்குச் சென்று தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இ-கேஒய்சி (e-KYC) கைவிரல் ரேகை பதிவை வைத்து இந்தப் பணியை முடிக்க வேண்டும். தவறினால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்படும் வாய்ப்பு அல்லது கார்டு ரத்தாகவும் வாய்ப்புள்ளது.
எனவே இதுவரை அலட்சியமாக இருப்பவர்கள் இனி விரைவாக ரேஷன் கடைக்குச் சென்று விபரங்களைக் கேட்டு இ-கேஒய்சி பணியை முடித்தால் அரசுக்கு உதவியாக இருக்கும் என்பதுடன் நாமும் தடையின்றி பொருள்கள் வாங்க முடியும்.