

தமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB) மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வாயிலாக மாவட்டந்தோறும் அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அரசு ஊழியர்களின் நலனை மேம்படுத்த வாடகை குடியிருப்புகள் மற்றும் சொந்த வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கீட்டிற்கு அரசு ஊழியர்கள் பணிபுரியும் அந்தந்த மாவட்டத்தின் தலைநகரில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, தங்களின் துறை அலுவலகம் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில அரசு குடியிருப்புகள் தலைமைச் செயலகப் பணியாளர்கள் உள்ளிட்ட துறையினருக்குச் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அரசு ஊழியர்களுக்காகப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதோடு, சொந்தமாக வீடு கட்டும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
மேலும் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதியவை கட்டப்படும்போது, ஏற்கனவே பதிவு செய்த பணியாளர்களுக்குப் பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குறிப்பாக தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குக் குடியிருப்புகளில் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB) பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை நந்தனத்தில் உள்ள வாரியத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வீட்டுவசதி வாரியத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் புதிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்த நடந்த ஆய்வு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அதன்படி, அரசு ஊழியர்களுக்கான சொந்த வீடு கட்டும் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை வீட்டுவசதி வாரியத்தால் மறு கட்டுமானம் செய்யும் பணிகளைத் தீவிரப்படுத்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வாரிய வாடகை மற்றும் அரசு வாடகை குடியிருப்புகளின் தற்போதைய நிர்வாக நிலவரங்கள் குறித்தும், முதலமைச்சரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தகுதியான ஒதுக்கீட்டாளர்களுக்குக் குடியிருப்புகளை வழங்குவது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மனை மேம்பாட்டுத் திட்டங்களை விரைந்து முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, மாநிலத்தின் மிக முக்கியத் துணை நகரத் திட்டங்களான திருமழிசை, உச்சப்பட்டி - தோப்பூர் (மதுரை), முள்ளூர் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் நிலவி வரும் திட்டப் பணிகளை மேம்படுத்துவதற்குத் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னை சைதாப்பேட்டை, தேனி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியவை கட்டும் திட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவற்றுடன் புதிய மனை மேம்பாட்டுத் திட்டங்கள், கூட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வணிக வளாகக் கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி, தங்களுக்குத் தேவையான வீடு மற்றும் மனைகளைப் பெற்றுக்கொள்ளப் புதிய தொழில்நுட்ப வசதிகளை விரைவில் வாரியத்தில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு, தற்போது வரை விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் குடியிருப்புகள் மற்றும் மனைகள் அனைத்தையும் ஆன்லைனில் (Online) விற்பனைக்குக் கொண்டு வர அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் பொதுமக்கள் எவ்வித இடைத்தரகர்களாலும் ஏமாற்றப்படாமல், மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும் சிரமமின்றியும் வாரியத்தின் சேவைகளைப் பெற முடியும். வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் இந்த அரசு அலுவலர் குடியிருப்புகள் பெரும்பாலும் குலுக்கல் முறையில்தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலும், இனிவரும் காலங்களில் வீட்டுவசதி வாரியத்தின் அனைத்துச் சேவைகளும், புதிய திட்டங்களும் முழுமையாக ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டுவசதி வாரியத்தின் கீழ் பொதுமக்கள் வீடு மற்றும் மனை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் :
தகுதியான பயனாளிகள்:
தமிழகத்தின் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
வேறு எந்த அரசு வீட்டுவசதித் திட்டத்தின் கீழும் ஏற்கனவே வீடு பெற்றிருக்கக் கூடாது.
தேவையான ஆவணங்கள் :
விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச் சான்று.
பணியாளர் அடையாள அட்டை / துறைச் சான்று.
சொந்த வீடு இல்லை என்பதற்கான சான்று.
வருமானச் சான்றிதழ் (ஆண்டு வருமானம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும்).