

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் அல்லது குறைகள் இருப்பின், பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் மூன்றாம் கட்டமாக குறைந்த விலைக்கு வெங்காய விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் இந்த வெங்காயம் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60-க்கு மேலும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.80-க்கு மேலும் விற்பனையாகி வரும் சூழலில், ரேஷன் கடையில் ரூ.35-க்கு விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் (Ration Card) தலா 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான ஒரு செய்தியாகும். சந்தையில் வெங்காய விலை கிலோ ரூ.80 வரை உயர்ந்துள்ள நிலையில், ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு 1 கிலோ வெங்காயம் வழங்குவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பெரியளவில் உதவும்.
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
இதுவரை இரண்டு கட்டங்களாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
அதாவது, இதன் முதற்கட்டமாக தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலம் 910 மெட்ரிக் டன், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 65 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இரண்டாவது கட்டமாக நாபெட் மூலம் 1,414.33 மெட்ரிக் டன், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 460 மெட்ரிக் டன் வெங்காயம் பெறப்பட்டது.
தற்போது வெங்காயத்தின் விலை மேலும் அதிகரித்து உள்ளதுடன், பொதுமக்களிடையே இந்தத் திட்டத்துக்கு தொடர்ந்து வரவேற்பும் தேவையும் இருப்பதால், மூன்றாவது கட்டமாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து மேலும் 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 10) முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் வெங்காய விற்பனை தொடங்கிய நிலையில், தற்போது இதர மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் அல்லது குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
ஏனெனில் இரண்டாம் கட்டமாக, கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்ட 1,000 டன் வெங்காயம் தரம் குறைவாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வெங்காயம், ஈரத்துடன் அழுகிய நிலையில் இருந்ததால் அவற்றை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டியதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் அல்லது குறைகள் ஏதேனும் இருந்தாலோ அல்லது வெங்காயம் பற்றாக்குறையாக உள்ளது என்று ரேஷன் கடை ஊழியர் தெரிவித்தாலோ, பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.