

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வரும் 19-ம்தேதி ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு கைரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ள இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கிற குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டுமென கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து, கைரேகை சரிபார்ப்புக்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 28-ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைத்தாரர்களின் கைரேகை பதிவு (eKYC) செய்யும் சிறப்பு முகாம் நாளை (செப்டம்பர் 19) சனிக்கிழமை நடைபெற உள்ளது.
முகாம் விவரங்கள்:
தேதி: 19.09.2026 (நாளை)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் (ரேஷன் கடைகள்).
குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) பெயர் உள்ள, ஆனால் இதுவரை கைரேகை சரிபார்ப்பு (eKYC) செய்யாத விடுபட்ட பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு ரேஷன் கடைக்கு நேரில் சென்று தங்களின் கைரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே ரேஷன் கார்டில் (குடும்ப அட்டை) பெயர் உள்ளவர்களில் இன்னும் கைரேகை பதிவு செய்யாதவர்கள், தங்களின் ரேஷன் கடைக்குச் சென்று கைரேகை வைத்து e-KYC (மின்னணு முறையில் வாடிக்கையாளரை அறிதல்) முறையை உடனே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முகாமிற்குச் செல்லும் போது உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கண்டிப்பாக உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
கைரேகை சரிபார்ப்பிற்காகப் பதிவு செய்ய வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேரில் (present) செல்ல வேண்டும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் (கைரேகை) பதிவு இருக்காது என்பதால், அவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படலாம் அல்லது ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
கைரேகை விழாதவர்கள், குழந்தைகள், முதியோர் தங்களது ஆதார் அட்டையில் விரல் ரேகை மற்றும் கண் பதிவை புதுப்பித்த பின்னரே மின்னணு முறையில் வாடிக்கையாளரை அறிதல் பதிவு செய்ய இயலும்.
ஆதார் அட்டையில் விரல் ரேகை, கண் பதிவு புதுப்பிக்க சம்பந்தப்பட்ட வட்டங்களில் உள்ள ஆதார் மையங்களை அணுகி கை ரேகை புதுப்பித்த பின் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் குடும்ப அட்டையுடன் ரேஷன் கடைக்கு சென்று நாளை (சனிக்கிழமை) நடைபெறும் சிறப்பு முகாமில் கைரேகை பதிவை புதுப்பித்து பயன்பெறலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு TNPDS அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தகவல்களைப் பெறலாம்.
ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த e-KYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ இன்னும் இதைச் செய்யவில்லை என்றால், உங்களின் ரேஷன் கடைக்குச் சென்று இந்தச் சரிபார்ப்பை விரைவில் முடித்துக் கொள்வது நல்லது.