நெல் கொள்முதல் முதல் ரேஷன் கடை வரை: அனைத்து புகார்களுக்கும் உதவி எண்கள் அறிவிப்பு!

விவசாயிகளுக்கான புதிய உதவி எண்கள் வெளியீடு; ரேஷன் கடை குறைகளுக்கும் தீர்வு!
நெல் கொள்முதல்
Paddy procurement
Updated on

விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை, தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமெனில் மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை லஞ்சம் வாங்கப்படுகிறது என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

பல கொள்முதல் நிலையங்களில் வாரக் கணக்கில் நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுக்காமல் இருப்பதால், மழை பெய்யும் போது நெல்மணிகள் முளைத்து விடுகின்றன. அதோடு நெல்லின் அதிகபட்ச ஈரப்பத அளவும் கூடி விடுகிறது. ஆகையால் நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசு தரப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது பொறுப்பேற்று இருக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நெல் கொள்முதலில் விவசாயிகள் ஏதேனும் பிரச்சினைகளை சந்தித்தால், புகார் அளிக்க தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி உணவுப் பொருள் விநியோகத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புகார் அளிக்கவும் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இதையும் படியுங்கள்:
ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற 4 நெல் ரகங்கள் எவை தெரியுமா?
நெல் கொள்முதல்

குறைந்தபட்சம் ஆதார விலை:

2026 - 2027 ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.72 கூடுதலாக உயர்த்தியுள்து மத்திய அரசு. இதன்படி பொது ரகம் 1 குவிண்டாலுக்கு ரூ. 2,441-ஆகவும், கிரேடு-A ரகம் 1 குவிண்டாலுக்கு ரூ. 2,461-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல் ஈரப்பத அளவு:

மத்திய அரசு விதிகளின் படி கொள்முதலின் போது 17% ஈரப்பத அளவுள்ள நெல்மணிகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் மழைக் காலங்களில் நெல்லின் ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்பதல் கொடுக்காத நிலையில், கொள்முதலின் போது மழை வந்தால் விவசாயிகளின் நிலைமை அவ்வளவு தான். இது போதாதென்று, நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வேறு.

உலகுக்கே உணவளிக்க உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை கொண்டாட முடியாவிட்டாலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

மேட்டூர் அணை திறக்கப்படாததன் விளைவு:

நடப்பாண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், சுமார் 1,000 ஏக்கர் பரப்பிலான குறுவை நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதற்குப் பின் மேட்டூர் அணையைத் திறந்து விட்டாலும் பயினில்லை என குமுறுகின்றனர் விவசாயிகள்.

புகார் அளிக்க உதவி எண்:

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரிசெய்ய தமிழக அரசு முன்வந்துள்ளது. இதன்படி கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை செய்தாலோ உடனே 1800-599-3540 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.

விவசாயிகளுக்கு இப்படி ஒரு சேவை இருக்கிறது என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் அனைவரின் கடமையாகும்

நெல் கொள்முதல்
Paddy
இதையும் படியுங்கள்:
விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்கான வழிகள் என்னென்ன?
நெல் கொள்முதல்

நெல் கொள்முதல் மட்டுமின்றி உணவுப் பொருட்கள் வநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டால் பொதுமக்கள் 1967, 1800-425-5901 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.

இதுதவிர www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் இனி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்துதல், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துதல் மற்றும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com