

ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணயக் கொள்கைக் குழு கூட்டம் இன்று (ஜூன் 3) முதல் 5-ம்தேதி வரையில் நடைபெறுகிறது. ஜூன் 5-ம்தேதி காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தனது முக்கிய முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார். ஏப்ரல் மாதத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்த ரிசர்வ் வங்கி, தற்போதும் அதே நிலைப்பாட்டைத் தொடருமா அல்லது வட்டி விகிதங்களில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யுமா என்பதை சந்தைகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று சில பொருளாதார வல்லுநர்களும், தற்போதைக்கு ரெப்போ விகிதம் (Repo Rate) மாறாமல் 5.25 சதவீதமாகவே இருக்கும் என்று சில வல்லுநர்களும் கணித்துள்ளனர்.
ஆனால் சில அறிக்கைகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 2026-27 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி குறைந்தபட்சம் 0.50 சதவீதம் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்கும் தெரிவிக்கின்றன.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதிலும் வங்கி அதிக கவனம் செலுத்தும்.
சில்லறை பணவீக்கம் குறைந்தாலும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு ரிசர்வ் வங்கியை எச்சரிக்கையாக இருக்க வைத்துள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி குறைப்பை தள்ளிப்போடுவதால், இந்தியாவும் அதே பாணியை பின்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்போதைக்கு உங்கள் மாதத் தவணையில் (EMI) பெரிய மாற்றம் இருக்காது. அதாவது வட்டி விகிதங்கள் குறைக்கப்படாது என்பதால், வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற வாடிக்கையாளர்களுக்கு இப்போதைக்கு இஎம்ஐ (EMI)சுமையில் எந்தவித தளர்வும் கிடைக்காது. இருப்பினும், ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் (RLLR) வாங்கியவர்கள், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
2025-ம் ஆண்டின் பிப்ரவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ரிசர்வ் வங்கி மொத்தமாக 1.25 சதவீதம் வட்டி விகிதங்களைக் குறைத்தது.
வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்களும் புவிசார் அரசியல் பதற்றங்களும் நிலைமையை மோசமானதாக மாற்றி, அதன் தாக்கம் ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலைகள், ரூபாயின் மாற்று விகிதம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது.
எனவே எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். இதனால் காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பாதிக்கப்படும். இது சாமானிய மக்கள் வாங்கும் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். வட்டி விகிதம் மாறாமல் இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை - ரூபாய் மதிப்பு சரிவு பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மற்றொருபுறம், சமீபத்திய மாதங்களில் ஒரு டாலருக்கு சுமார் 90 ரூபாயிலிருந்து 95 ரூபாய் வரை சரிந்து பணவீக்க அபாயத்தை அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்றும் சில பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்வு, சப்ளை செயின் சிக்கல்கள் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது என நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பணியை தான் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.