
கிரிக்கெட் உலகில் ஒருசில பேட்ஸ்மேன்களை அனைத்து நாட்டு ரசிகர்களும் விரும்புவர். அப்படிப்பட்ட அசாத்தியமான ஒரு வீரர் தான் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ். டிவில்லியர்ஸின் அதிரடியான பேட்டிங் மற்றும் வித்தியாசமான ஷாட்டுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலே சிக்ஸ் அடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்த டிவில்லியர்ஸ், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை விளாசும் திறன் பெற்றவர். இதனால் தான் இவரை கிரிக்கெட் ரசிகர்கள் மிஸ்டர் 360° என அழைப்பார்கள்.
டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 11 சீசன்களில் விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் விளையாடிய காலத்தில் பெங்களூர் அணி ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை என்பது சோகமான விஷயம். இருப்பினும் நடப்பாண்டில் நடந்த முடிந்த 18வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று பெங்களூர் அணி அசத்தியது. பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் கோப்பையை டிவில்லியர்ஸ் கையில் ஏந்தி விராட் கோலியுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட தருணம், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெங்களூர் அணிக்காக மீண்டும் களத்தில் இறங்க நான் தயாராக இருக்கிறேன் என ஏபி டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்ற கிரிக்கெட் களத்திற்குள் மீண்டும் நுழைய பயிற்சி எடுத்தார் டிவில்லியர்ஸ். இதன்படி நடப்பாண்டு நடைபெற்ற லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக களமிறங்கி கோப்பையைக் கைப்பற்றி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்னமும் இவரது ஆட்டம் வெறித்தனமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆர்சிபி அணிக்காக மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், எனது இதயம் எப்போதும் ஆராசிபி அணியுடன் தான் இருக்கும். வருங்காலத்தில் ஆர்சிபி அணிக்காக பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அதனை ஏற்பேன். ஒரு வீரராக அல்லாமல் ஆலோசகர் அல்லது பயிற்சியாளர் போன்ற ஏதேனும் ஒரு ரூபத்தில் ஆர்சிபி அணிக்கு பங்காற்ற என்னால் முடியும். ஒரு தொடர் முழுக்க பொறுப்பை ஏற்பது கடினம் என்றாலும், ஆர்சிபி அணியில் ஏதேனும் பணி காலியாக இருந்தால், நிச்சயமாக நான் பணியாற்ற தயாராக உள்ளேன்” என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
டிவில்லியர்ஸின் இந்த அறிவிப்பால் 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியுடன் அவர் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் செயலாற்றி வரும் நிலையில், டிவில்லியர்ஸ் ஆலோசகராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.