S.I.R படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமா ?- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்..!

Chief Electoral Office Archana Patnaik & SIR Work
Chief Electoral Office Archana Patnaik & SIR Workimage credit-prameyanews.com
Published on

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இந்த பணிகள் தமிழகம் மட்டுமின்றி, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள கேரளா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த திருத்த பணியில் பீகார் மாநிலத்தில் மட்டும் பல லட்சம் வாக்காளர்களின் பெயர் விடுபட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த தீவிர திருத்த பணியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் SIR என்று அழைக்கக்கூடிய தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும், குழப்பங்களும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு நடுவே SIR படிவங்களில் உறவினர்களின் விவரங்களை நிரப்புவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் SIR படிவங்களில் உறவினர்களின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் தெரிந்த விவரங்களை மட்டும் நிரப்பினால் போதும் என்றும் 2002, 2005 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய இயலாவிட்டால் பிற விவரங்களை நிரப்பலாம் எனவும் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே வாக்காளர் இது குறித்து அச்சமோ குழப்பமோ அடைய வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

SIR படிவத்தில் வாக்காளர் பட்டியல் எண், உங்களது பெயர், முகவரி மட்டும் சரியாக இருந்தால் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் விடுபடாது, கவலைப்படத்தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அனைத்து விவரங்களையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதனால் குழப்பமடைய வேண்டாம் என்ற உறுதிமொழியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டதா? - ஆன்லைனில் சரிபாபார்ப்பது எப்படி?
Chief Electoral Office Archana Patnaik & SIR Work

தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 4 கோடியே 53 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், கணக்கீட்டு படிவங்களைப் பெற்ற வாக்காளர்கள் டிச.4 வரை காத்திருக்காமல் உடனடியாகப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர், உதவி மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 4-ம் தேதிக்குள் படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள், டிச.9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.

3 முறை அதிகாரிகள் வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்களும் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரைவுப் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்துப் புதிதாக விண்ணப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com