

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் தனியார் துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய மற்றும் லாபகரமான நிறுவனமாகும். 1966-ம் ஆண்டு திருபாய் அம்பானி அவர்களால் ரூ.15 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது பில்லியன் வருமானம் கொண்ட நிறுவனமாக உலகளவில் வளர்ந்துள்ளது. இன்று இந்நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிகல்ஸ், துணி, சில்லறை விற்பனை போன்ற பல்வேறு துறைகளில் இறங்கி வணிகம் செய்து வருகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல ஆரோக்கிய உணவு பிராண்டான Southern Health Foods நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற Manna தயாரிப்புகள் இனி ரிலையன்ஸ் வசமாகிறது. சமீப காலமாகப் பல்வேறு நிறுவனங்களை வாங்கி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது உணவு பொருட்களின் மீது பார்வையை திருப்பி சவுத் ஹெல்த் புட்ஸை வாங்கி தொழில் நிறுவனங்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கச்சா எண்ணெய்யை வாங்கி பெட்ரோலாக அதை சுத்திகரித்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதான தொழிலாக இருந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் வாங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் நீடிப்பதாலும், கச்சா எண்ணெயின் டிமாண்ட் தொடர்ந்து குறைந்து வருவதாலும், கடந்த சில ஆண்டுகளாகவே தனது கவனத்தை வேறு பல துறைகளின் மீதும் செலுத்தி வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜியோவில் ஆரம்பித்து அதன் பிறகு வரிசையாகப் பல்வேறு துறைகளிலும் ஜியோ மெல்ல நுழைந்து வரும் நிலையில் சமீபத்தில் கேம்பாகோலாவை லான்ச் செய்து விற்பனை செய்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் Consumer Products பிரிவு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சத்துமாவுக்கு பெயர்போன மன்னா பிராண்டின் தாய் நிறுவனமான Southern Health Foodsஐ ரூ.156 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இதை வாங்கியதன் மூலம் ரிலையன்ஸ் tata consumer products limited, சிறுதானியம் மற்றும் ஹெல்த் உணவுப் பிரிவில் ரிலையன்ஸ் கவனம் செலுத்தப் போவது தெளிவாகத் தெரிகிறது.
சமீபத்தில் தான் உயர்தர பருப்பு வகைகளுக்கு பெயர் பெற்ற உதயம், இன்டிபென்டன்ஸ், சில் (SiL) உள்ளிட்ட பிராண்டுகளை ரிலையன்ஸ் வாங்கியிருந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் Southern Health Foods இணைந்துள்ளது.
2020-ல் ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நிறுவனத்தை வாங்கி அதன் மொத்த வர்த்தகத்தை தனது ஸ்மார்ட் பஜார் உடன் இணைத்தது. கடந்த டிசம்பர் மாதம் உதயம் நிறுவனத்தின் பெரும்பங்கை வாங்கி வெறும் 2 மாதங்கள் மட்டுமே ஆனநிலையில் மீண்டும் மண்ணா பிராண்டின் தாய் நிறுவனமான Southern Health Foods வாங்கி இருப்பது தொழில் நிறுவனங்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இதுவரையில் 3 பெரிய மற்றும் பிரபலமான பிராண்டுகளை முகேஷ் அம்பானி தன்வசப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் மன்னா பிராண்டுக்கு எனத் தனி வாடிக்கையாளர்களே உள்ளனர். Southern Health Foods நிறுவனம் சிறுதானியங்கள், ஓட்ஸ், தானியம், ஹெல்த் மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதுடன், அதன் மன்னா பிராண்ட், சிறுதானிய மாவு, குழந்தை உணவு உள்ளிட்ட மிக்ஸ்களில் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் மக்களின் வாழ்க்கை முறையும் உணவுபழக்க வழக்கங்களும் வேகமாக மாறி வரும் அதேவேளையில் ஆரோக்கியமான உணவு, சத்து நிறைந்த பொருட்களுக்கான தேவையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் இந்த வளரும் சந்தையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக நிறுவனங்களை கையகப்படுத்துதலின் மூலம் தனது வர்த்தக முதலீடுகளை விரிவுபடுத்த நினைப்பதுடன் வேகமாக வளர்ந்து வரும் சிறுதானிய உணவுச் சந்தையில் ஒரு வலுவான இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னனி நிறுவனங்களை கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவது தொழில் போட்டி நிறுவனங்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லவேண்டும்.