
இந்தியாவில் கடந்த சில காலமாக மக்களிடையே சில்லறை தட்டுப்பாடு அதிகளவில் காணப்படுவதாக சர்வே கூறுகிறது. சந்தையில் ஏற்பட்ட சில்லறை பணம் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கும் மற்றும் கடைக்காரர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதுடன், பல்வேறு பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2023-ம் ஆண்டில் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி முற்றிலுமாக திரும்பபெற்ற நிலையில், சமீபகாலமாக ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வருகிறது. உதாரணமாக, 1000 ரூபாயை ஏடிஎம்மில் எடுத்தால் அதில் இரண்டு 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வருகிறது. 100, 200 ரூபாய் வருவதில்லை.
இதனால் ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாட்டால் சிறிய பரிவர்த்தனைக்கு கூட பொதுமக்கள் யூபிஐ மூலம் பணம் செலுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி 5 ரூபாய்க்கு கூட யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த பிரச்சனை இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் இடையே ஏற்பட்டுள்ள சில்லறை பிரச்சனையை சரி செய்வதற்காக, ஆர்பிஐ ஒரு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சில்லறை பிரச்சனையை சரி செய்வதற்காக, இனிமேல் ஏடிஎம் இயந்திரங்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் சாதாரண மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் அதிகமான அளவில் வைக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய 100, 200 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி அனைத்து வங்கிகளும் குறிப்பாக வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் கட்டாயம் தங்கள் ஏடிஎம்களில் குறைந்தது ஒரு கேசட் வழியாக 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டும்
என்றும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் கட்டாயமாக 75 சதவிகிதம் 100, 200 ரூபாய் நோட்டுகளை குறைந்தபட்சம் ஒரு கேசட்டிலாவது விநியோகிக்க வேண்டும் என்றும், 2026 மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் 90% ஏடிஎம்களில் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு கட்டாயம் வர வேண்டும் எனவும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
இதற்காக வங்கிகள் புதிய இயந்திரங்களை வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஏற்கனவே இருக்கும் ஏடிஎம்களில் சில சீரமைப்புகளை செய்தாலே போதுமானது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், இனிவரும் காலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் 100, 200 ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் கிடைக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் இடையே படிப்படியாக சில்லறை பணம் தட்டுப்பாடு நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் என்னதான் யூபிஐ பயன்பாடு அதிகரித்திருந்தாலும் இன்னமும் பல இடங்களில் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை அதிமாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே மக்களின் சில்லறை பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.