
சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் கார், ஆட்டோ மற்றும் பைக் டாக்சிகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆன்லைன் வழியாக பொதுமக்கள் டாக்சி சேவையை மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இருப்பினும் ஆன்லைன் செயலியில் காட்டும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை ஓட்டுநர்கள் கேட்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ உள்ளிட்ட கால் டாக்சி செயலிகள் இயங்கி வருகின்றன. ஆன்லைன் செயலி அல்லாது தனியாக ஒரு டாக்சியை பொதுமக்கள் பயன்படுத்தினால் கட்டணம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஆன்லைன் செயலிகளில் சற்று குறைவான கட்டணம் என்பதால் பொதுமக்கள் பலரும் டாக்சி சேவைகளைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆன்லைன் டாக்சி செயலியில் காட்டும் கட்டணத்தை விடவும் கூடுதல் கட்டணத்தை ஓட்டுநர்கள் கேட்பதாகவும், டாக்சி காத்திருக்கும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் தரவில்லை எனில் புக்கிங்கை கேன்சல் செய்து விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை நெறிமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு புதிய செயலியை வடிவமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி விரைவில் கார், ஆட்டோ மற்றும் டாக்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கான முதல் கொள்கையை தமிழக அரசு வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கொள்கையின் படி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் நலன் காக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பயணிகள் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு இடையே எவ்வித ஒருங்கிணைப்பும், விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. மேலும் குறைதீர்க்கும் வழிமுறைகள் கூட இல்லாமல் சட்டப்பூர்வமற்ற முறையில் தான் டாக்சிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் புதிய கொள்கையின் படி முதல் 3கி.மீ. தொலைவுக்கு அடிப்படைக் கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பறகு தேவைக்கு ஏற்ப கட்டண விகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சொந்த வாகனத்தில் டாக்சி ஓட்டும் ஓட்டுநர்களுக்கு சிறிய பங்கு லாபமாக கிடைக்கும். நியாயமற்ற முறையில் ஆன்லைன் புக்கிங்கை ரத்து செய்தால் அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் டாக்சி தளங்கள் அனைத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு ரூ.5 இலட்சம் உரிமைக் கட்டணத்தை நிரண்யிக்கவும் அரசு ஆலோசனை செய்து வருகிறது.
புதிய கொள்கை வழிகாட்டுதல்களை அரசிதழில் வெளியிட்டு, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முடிவில் தான் தமிழக அரசு சார்பில் புதிய செயலி உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.