

மத்திய அரசு வெளியிட்டுள்ள விலை கண்காணிப்பு தரவுகளின்படி, வெங்காயத்தை தொடர்ந்து சர்க்கரையின் விலை சுமார் 22% வரையிலும், சூரியகாந்தி எண்ணெயின் விலை 18% வரையிலும் உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் இந்த விலையேற்றம் காரணமாக, செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் (Retail Inflation) இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.5% ஆக அதிகரித்துள்ளது.உணவு பணவீக்கம் மட்டும் ஆண்டிற்கு 7.74% ஆகப் பதிவாகியுள்ளது.
இதில் உருளைக்கிழங்கு மட்டும் விதிவிலக்காகும். வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட 113 சதவீதம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்க்கரை 22 சதவீதம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் 18 சதவீதமாக விலைகளும் உயர்ந்துள்ளன.
பருப்பு மற்றும் தானியங்களின் விலை நிலைமை:
துவரம் பருப்பு: இதன் சராசரி சில்லறை விலை கடந்த ஆண்டில் கிலோ ₹113 ஆக இருந்த நிலையில், தற்போது ₹129 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் இதன் விலை கிலோ ₹140 முதல் ₹145 வரை விற்கப்படுகிறது.
கடலை பருப்பு: கடலைப்பருப்பின் சராசரி விலை, ஓராண்டுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.85 ஆக இருந்த நிலையில் இப்போது 6.4 சதவீதம் உயர்ந்து கிலோவுக்கு ரூ.91 ஆக அதிகரித்துள்ளது.
அரிசி & கோதுமை: சாதாரண அரிசியின் சராசரி விலை 12% உயர்ந்து கிலோ ₹47 ஆக உள்ளது. கோதுமை மற்றும் கோதுமை மாவின் (ஆட்டா) விலையில் சிறிய அளவிலான உயர்வே காணப்படுகிறது.
சர்க்கரையின் விலை, ஒரு மாதத்திற்கு முன்பு கிட்டத்தட்ட ரூ.59ஆக இருந்த நிலையில் இருந்து ரூ.56 ஆகக் குறைந்திருந்தாலும், அது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட 22 சதவீதம் அதிகமாகவே உள்ளது.
சமையல் எண்ணெய்கள்:
சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ₹191 ஆக உயர்ந்து 18% அதிகரிப்பைப் பதிவிட்டுள்ளது. இதற்கடுத்து பாமாயில் 15.2% மற்றும் சோயா எண்ணெய் 14.6% உயர்ந்துள்ளன. கடுகு எண்ணெயின் விலை கடந்த ஆண்டு ₹188 ஆக இருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு ₹204 ஆக அதிகரித்துள்ளது.
காய்கறிகள் நிலைமை என்ன?
நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில், பருவமழை தாமதம் மற்றும் சாகுபடி பரப்பு குறைவால் காரீஃப் பருவ வெங்காய உற்பத்தி 5-7% குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் சராசரி விலை கிலோ ₹53 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ₹42 வரை விற்கப்படுகிறது. [1] ஆனால், உருளைக்கிழங்கு விலை மட்டும் 6%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
புதிய காரீஃப் பயிர்கள் சந்தைக்கு வரத் தொடங்கியதும் வெங்காயத்தின் விலை குறையும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.