

நம் நாட்டில் கேஒய்சி (KYC)சரிபார்ப்பு எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பல முறை கேஒய்சி சரிபார்ப்பு இருப்பதால் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதை தவிர்க்க மத்திய அரசு மத்திய கேஒய்சி (CKYC - சிவிகேஒய்சி எண்)முறையை கொண்டு வந்துள்ளது. மத்திய கேஒய்சி செய்த பிறகு நீங்கள் மீண்டும் மீண்டும் KYC சரிபார்ப்பு செய்ய வேண்டியதில்லை.
CKYC (Central Know Your Customer) என்பது இந்திய நிதி நிறுவனங்களுக்கான (வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு) மத்திய பதிவு அமைப்பாகும். இந்த அமைப்பால் வழங்கப்படும் 14 இலக்க தனித்துவமான எண் தான் CKYC எண் (KIN) ஆகும். இந்த எண் உங்கள் ஆவணங்களின் அடிப்படையில் ஒருமுறை உருவாக்கப்பட்டால், நீங்கள் மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. வங்கிக்கோ மற்ற இடங்களுக்கோ நீங்கள் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய சிரமம் இல்லை.
நிதி சேவைகளை அதிகம் பயன்படுத்தும் இடங்களில் இந்த வசதி பரவலாக்கப்படும் என்று கூறப்படுகிறது. செபி, ரிசர்வ் வங்கி (RBI), IRDAI மற்றும் PFRDA ஆகியவற்றின் கீழ் பல்வேறு நிதி நிறுவனங்கள் உள்ளன. அதில் நீங்கள் CKYC செய்து கொள்ளலாம். நீங்கள் எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்திருந்தாலும் அந்த வங்கியின் கிளைக்குச் சென்று CKYC செய்து கொள்ளலாம். CKYC செயல்முறை முடிவடைய 15 நாட்கள் வரை ஆகலாம்.
CKYC எண் ஏன் அவசியம்?
ஒவ்வொரு முறையும் புதிய வங்கி கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், அல்லது காப்பீடு வாங்கும்போது KYC ஆவணங்களை (ஆதார், பான் போன்றவை) சமர்ப்பிக்கும் சிரமம் தவிர்க்கப்படுகிறது.
உங்கள் தகவல்கள் மத்திய தரவுத்தளத்தில் (CERSAI) பாதுகாப்பாக இருப்பதால், புதிய சேவைகளை மிக விரைவாகவும், எளிதாகவும் பெற முடியும்.
உங்கள் தகவல்கள் அனைத்திந்திய அளவில் ஒரே சீராக (Standardization) பராமரிக்கப்படுகிறது.
உங்களின் முகவரி அல்லது மொபைல் எண் மாறினால், ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் அதை மாற்றினால் போதும்; அந்தத் தகவல் தானாகவே மற்ற நிறுவனங்களிலும் புதுப்பிக்கப்படும்.
நிதி மோசடிகளைத் தடுக்கவும், உங்கள் தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே அணுகப்படுவதை உறுதி செய்யவும் இது உதவுகிறது.
CKYC எண்ணைக் கண்டறியும் வழிகள்:
உங்கள் CKYC எண்ணை நீங்கள் பின்வரும் வழிகளில் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்:
நீங்கள் முதலீடு செய்யும்போதோ அல்லது வங்கி கணக்கு தொடங்கும்போதோ உங்கள் CKYC எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS ஆக அனுப்பப்பட்டிருக்கும்.
நீங்கள் பயன்படுத்தும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் (எ.கா: SBI, HDFC, Axis, Zerodha, முதலியன) மொபைல் செயலி (Mobile App) அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து (Net Banking), 'Profile' அல்லது 'My Account' பிரிவைச் சரிபார்க்கவும்.
உங்கள் DigiLocker கணக்கிற்குள் நுழைந்து, ஆவணங்களை இணைக்கும்போது உங்கள் CKYC கார்டை எடுக்க முடியும்.
CKYC India அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP சரிபார்ப்பு மூலம் உங்கள் CKYC கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சில முன்னணி நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக வசதிகளை வழங்குகின்றன (எ.கா: வாட்ஸ்அப் அல்லது மிஸ்டு கால் மூலம் OTP சரிபார்த்தல்).
உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 77990 22129 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் எண்ணை உடனடியாகப் பெறலாம்.
CKYC சரிபார்புக்கு தேவையான ஆவணங்கள் :
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
பான் கார்டு,
ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை,
ஓட்டுநர் உரிமம்
- வீட்டு முகவரி உள்ள ஏதேனும் ஆவணம் தேவைப்படும்.
வாடிக்கையாளர்கள் CKYC சரிபார்ப்புக்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் போது வங்கி அல்லது வேறு ஏதேனும் நிதி நிறுவனம் அந்த ஆவணங்கள் அனைத்தும் உண்மையானதா என்பதை சரிபார்க்கும்.
அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் CKYC முறையின் 14 இலக்க எண் வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் அனுப்பப்படும்.