
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) 2025 செப்டம்பர் 22 முதல், நான்கு அடுக்கு வரி முறையிலிருந்து இரண்டு அடுக்கு முறைக்கு (5% மற்றும் 18%) எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சில நுகர்வோர் பொருட்களின் விலை குறைந்துள்ளது. இந்த ஜி.எஸ்.டி. 2.0 சீர்திருத்தம் வரிச் சுமையைக் குறைத்து, நுகர்வை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், சட்டமுறை எடையளவை (உறையிட்ட பொருட்கள்) விதிகள், 2011, பிரிவு 18 (3) ன் கீழ் பொருள் தொடர்பாக செலுத்த வேண்டிய எந்தவொரு வரியும் திருத்தப்படும்போது அதை குறைந்தது,
2 விளம்பரங்கள் செய்வதன் மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவதன் மூலமாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்.
எனினும் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க மத்திய அரசு பிரிவு 33-ன் கீழ் விலக்கு அளித்துள்ளது. பேக்கேஜிங் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதம் சீர்திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்டதன் மூலம் பேக்கேஜிங் துறையில் பொருட்களின் விலைக் குறைப்பு ஏற்படுகிறது. புதிய ஜி.எஸ்.டி. விகிதங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள், தங்களது புதிய பேக்கேஜிங்கைத் தயாரிப்பதற்கு முன் மார்ச் 2026 வரை பழைய பேக்கேஜிங் ஸ்டாக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. பழைய பேக்கேஜிங் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள், புதிய ஜி.எஸ்.டி. விகிதங்களின்படி திருத்தப்பட்ட விலை ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். இந்த சீர்திருத்தம், நுகர்வோருக்குப் பயனளிக்கும் வகையில், சில பொருட்களின் விலையைக் குறைத்து, ஜி.எஸ்.டி. வரி அமைப்பை எளிமைப்படுத்துகிறது.
இதன் அடிப்படையில் ஜி.எஸ்.டி. திருத்தத்திற்கு முன்னர் (அதாவது கடந்த மாதம் 22-ந் தேதிக்கு முன்பு) உற்பத்தியாளர், பேக்கர், இறக்குமதியாளரால் லேபிள் ஒட்டப்பட்டு மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளிடம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கும்.
அந்த பொருட்கள் மற்றும் முன்னரே உற்பத்தி செய்து தீர்ந்து போக முடியாத பேக்கேஜிங் பொருள் அல்லது ரேப்பரையும் 31.3.2026 வரையிலோ அல்லது பேக்கிங் பொருள், ரேப்பர் தீர்ந்து போகும் தேதி வரை வரை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பேக்கேஜிங் பொருட்களில் மேல் உள்ள லேபிள் மீது தெளிவாக காணக்கூடிய இடத்தில் திருத்தப்பட்ட விலை விவரங்களை முத்திரையிட்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில், பேக்கேஜிங் பொருட்களின் மீது பழைய ஜி.எஸ்.டி. விலைக்கு அல்லது திருத்தப்பட்ட விலை விவரங்கள் ஒட்டப்படாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், விதிமீறும் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு சட்டமுறை எடையளவை சட்டம், 2009-ன் பிரிவு 36 (2) கீழ் அதிகபட்ச தண்டனையாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை சட்டமுறை எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.