இன்றைய இளம் தலைமுறையினர் இடையே புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்து காணப்படுவதால், அதனைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் உள்ளன. இந்நிலையில் அதிகளவு புகையிலைப் பயன்பாட்டால், ஆண்டுதோறும் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் பீடி, சுருட்டு, சிகரெட் மற்றும் குழாய் போன்ற புகையிலைகளை ஆண்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் கிட்டத்தட்ட 70 ரசாயனங்கள் உடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.
இன்றைய சூழலில் உலக அளவில் ஆறு பேரில் ஒருவரது மரணம் புற்றுநோயால் நிகழ்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதிலிருந்தே புற்றுநோய் பாதிப்பு மனிதர்களை எந்த அளவிற்கு தாக்குகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
உலகளவில் ஆண்டுதோறும் புற்றுநோயினால் மட்டும் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். சமீபத்தில் புற்று நோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷ்யா அறிவித்தது. இந்த தடுப்பூசி நடைமுறைக்கு வரும் பட்சத்தில் கடைசி நிலையில் இருக்கும் புற்றுநோயாளிகளைக் கூட காப்பாற்ற முடியும் என கூறப்படுகிறது. இருப்பினும் புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மனிதர்கள் மத்தியில் புகையிலை குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படாத வரை இதனைக் குறைப்பது கடினம் தான். புகையிலைகளில் உள்ள 70 ரசாயனங்கள் நம் உடலில் கலக்கும் போது, அவை இரத்த ஓட்டங்களில் புகுந்து உடலின் அனைத்து பகுதிகளையும் சென்றடைகிறது. பிறகு இவை நம் உடலில் உள்ள டிஎன்ஏ-வை சேதப்படுத்தி, புதிய செல்களை உருவாக்குகிறது. இப்படி அபரிமிதமாக உருவாகும் புதிய செல்களால் தான் நாளடைவில் புற்றுநோய் ஏற்படுகிறது.
சிகரெட் மற்றும் பீடியை புகைப்பவர்கள் மட்டுமல்லாது, அருகில் இருப்பவர்களுக்கும் இந்த ரசாயனங்கள் உடலில் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
இது குறித்து புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள் கூறுகையில், “புற்றுநோயால் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் புகையிலைக்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்பிடிப்பதால் புற்றுநோய் உருவாவது மட்டுமின்றி, அனைத்து உடல் உறுப்புகளும் சேதமடையும். ஒருவர் புகைபிடிக்கத் தொடங்கும் போது, முதலில் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல் தான். தொடர்ச்சியாக புகைப்பிடித்து வரும் நபர்களுக்கு முதலில் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் ஏற்படும்.
பிறகு வாசனை உணராமை, கறை படிந்த பற்கள், பல் விழுதல், சுவை குறைதல் மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். சமீபத்திய ஆய்வுகளின் படி புகைபிடிக்கும் 10 பேரில் 9 பேர் கிட்டத்தட்ட 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புகைபிடிக்கும் 100 நபர்களில், ஐந்து மாணவர்கள் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தினமும் முதன்முறையாக புகைபிடிக்கத் தொடங்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. புகையிலையில் உள்ள 70 ரசாயனங்கள் உடலில் கலப்பதால், மனிதர்களுக்கு ஏற்படும் புற்று நோயின் அளவு வெகு விரைவிலேயே தீவிரமடைகிறது.
சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய நிலையில் புகை பிடித்தல் மற்றும் புற்றுநோயின் விழிப்புணர்வுகளை இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம். இளம் தலைமுறை இரண்டின் புகைபிடிக்கும் பழக்கத்தை இப்போதே கட்டுப்படுத்தாவிட்டால் அது நான் வருங்காலத்தை வெகுவாக பாதிக்கும்” என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.