பேச்சிலர் தலையில் இடியாக வந்த செய்தி... ஒரு தோசை விலை 60 ரூபாயா..?

சிலிண்டர் விலை உயர்வால் ரூ.20 ஆக இருந்த 2 இட்லி, ரூ.30 ஆகவும், ரூ.40 ஆக இருந்த தோசை ரூ.60 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
food rate hike
food rate hikeAI Image
Updated on

கடந்த பிப்ரவரி 28-ம்தேதி அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதலில், உலகளாவிய எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, இது இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியா, வளைகுடா நாடுகளுடன் ஆழமான உறவைக் கொண்டுள்ளதால், இப்பகுதியில் ஏற்படும் பதற்றம் எண்ணெய் இறக்குமதி, வர்த்தகம் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

40 நாள் கடுமையான தாக்குதலுக்குப் பிறகு தற்காலிக இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், போர் முடிவிற்கான தெளிவான தீர்வுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை. இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டால் இந்தியாவில் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டு இப்போது தான் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஓட்டல்களை நடத்துபவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே சிலிண்டர் வினியோகத்தை நிறுத்திய போதிலும் கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர்கள் தங்கு தடையின்றி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.2,200 மதிப்பிலான வணிக சிலிண்டர் ஆரம்பத்தில் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில் தற்போது அது பின்னர் படிப்படியாக அதிகரித்து ரூ.8 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசாங்கம் வழங்கும் வணிக சிலிண்டரின் விலை 165 சதவீதமும், தனியார் நிறுவனங்களின் சிலிண்டரின் விலை 265 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி நோ ஸ்விக்கி, சொமேட்டோ… கேஎஃப்சி, பெப்சியும்தான் - தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி!
food rate hike

கேஸ் தட்டுப்பாடு மட்டுமின்றி கள்ளச்சந்தைகளில் கேஸ் விலை அதிகரித்து வருவதால் ஓட்டல்களில் உணவுகளின் விலை உயர்ந்துள்ளது.

சாலையோரம் உள்ள ஓட்டல்கள், சிறிய உணவகங்கள், பெரிய ஓட்டல்கள் என அனைத்து வகையான ஓட்டல்களிலுமே இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி, பரோட்டா, கலவை சாதங்கள், பிரியாணி, சைவ மற்றும் அசைவ சாப்பாடு, பிரைடு ரைஸ் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுகளுமே ரூ.5-ல் இருந்து ரூ.30 வரையில் அதிரடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெரிய ஓட்டல்கள் 5 முதல் 10 சதவீதம் தான் உணவுகளின் விலையை உயர்த்தியுள்ளது.

உதாரணத்துக்கு ரூ.20 ஆக இருந்த 2 இட்லி, ரூ.30 ஆகவும், ரூ.40 ஆக இருந்த தோசை ரூ.60 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சில உணவகங்களை கடையை திறக்கும் நேரத்தை குறைத்தும், அதிகம் விற்பனையாகும் உணவுகளை மட்டும் தயாரிப்பதுமான நிலைக்கு மாறியுள்ளன.

இதனால் வேலைக்காகவும், கல்விக்காகவும் வெளி மாநிலங்களில் தங்கி இருப்பவர்கள் உணவிற்காக கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பேச்சிலர்கள் அவர்களது உணவு தேவையை சிறிய தள்ளுவண்டிக்கடைகளில் முடித்து கொள்வார்கள். ஆனால் தற்போது அங்கும் உணவின் விலை உணர்ந்துள்ளதால் அதற்காக தனியாக ஒரு தொகையை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது இதற்கு முன்பு சிறிய கடைகளில் காலை உணவை 8 பேர் சாப்பிட்டால் ரூ.600 வரையில் செலவான நிலையில், தற்போது அதே உணவிற்கு ரூ.1000 வரையில் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் புலம்புகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்திடம் கேட்ட போது, உணவகங்களில் விலை உடனடியாக குறைய வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் டிரம்ப் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியப்படும். சிலிண்டர் விலை 10 சதவீதமும், சமையல் எண்ணெய் விலையும் குறைந்த சதவீதத்திலும் தான் குறைய வாய்ப்புள்ளது. ஏற்றம் கண்ட சதவீத அளவுக்கு குறையாது. அதே அளவுக்கு குறைந்தால் நாங்களும் உணவு வகைகளின் விலையை குறைக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினர்.

சிலிண்டர் விலை பழைய விலைக்கு வந்தால் மட்டுமே அதுவும் சாத்தியம். ஓட்டல்களில் உணவுகளின் அளவையும், தரத்தையும் நாங்கள் எப்போதும் குறைப்பது இல்லை. விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மாதந்தோறும் சிலிண்டர் விலையேற்றத்தை மத்திய அரசு அறிவிக்கும். இந்த வகையில் நாளை மே 1-ந்தேதி வணிக கேஸ் சிலிண்டரின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் உணவுப்பொருட்களின் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அம்மா உணவகம் மாடல் இனி டெல்லியிலும்: ரூ. 5-க்கு சத்தான 'தாலி' உணவு!
food rate hike

இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசு வணிக சிலிண்டர்களின் வினியோகத்தை சீராக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com