2035-ல் தங்கத்தின் விலை ரூ.9 லட்சமா? கியோசாகியின் பகீர் கணிப்பு!

தங்க முதலீடு
Gold Price
Updated on

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 100 நாட்களுக்கும் மேல் நீடித்து வந்த போர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வருகின்ற ஜூன் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை சுமார் 4% வரை குறைந்தது. ஆனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

நேற்று ஒருநாள் மட்டும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 100 டாலர் வரை உயர்ந்து 4,300 டாலருக்கு விற்பனையானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை 100 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தங்கம் தன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது எனவும், 2035-ம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 35,000 டாலருக்கு விற்பனையாகும் எனவும் பிரபல எழுத்தாளரும், முதலீட்டாளருமான ராபர்ட் கியோசாகி கணித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காகித வடிவிலான ETF முதலீடுகளைக் காட்டிலும், நேரடியான முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு எத்தகைய லாபத்தை அளிக்கும் என்பதையும் கணித்துள்ளார்.

ராபர்ட் கியோசாகி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு இறுதியாக தங்கத்தின் விலையேற்றம் தற்போது தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கம் 100 டாலருக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வை நீங்கள் கவனித்தீர்களா? ஒருவேளை இந்த விலையேற்றத்தை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் தங்கத்தின் விலையேற்றம் இப்போது தான் தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,300 டாலராக உள்ளது. வருகின்ற 2035-ம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 35,000 டாலராக உயரும் என நான் உறுதியாக நம்புகிறேன். 35-ல் தொடங்கி 35-ல் முடியும் அற்புதமான எண்கள் மற்றும் தேதிகள் இவை.

துரதிருஷ்டவசமாக பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பணத்தை பணமாகவே சேமித்து வைத்திருப்பவர்கள் இழப்பை சந்திப்பார்கள். நீங்கள் தோல்வியாளராக இருக்க வேண்டாம்.

உங்கள் பணத்தைக் கொண்டு தங்கம், வெள்ளி, பிட்காயின், எதீரியம் மற்றும் கச்சா எண்ணெயை வாங்குங்கள். பல ஆண்டுகளாக நான் இப்படித் தான் முதலீட்டை மேற்கொண்டு வருகிறேன். போலியான காகிதப் பணத்தை மாற்றி, உண்மையான பணத்தை சேமித்து வருகிறேன்.

தோல்வி அடைந்தவனாக இருப்பது எனக்கு பிடிக்காது. நீங்கள் தோல்வி அடைவதையும் நான் விரும்பவில்லை. முதலீட்டு உலகில் கவனமாக இருங்கள்” என ராபர்ட் கியோசாகி பதிவிட்டுள்ளார்.

Robert Kiyosaki
Robert Kiyosaki
இதையும் படியுங்கள்:
#JUST IN: ரூ.5,000 சரிவு.! தங்கம், வெள்ளி விலையில் தலைகீழ் மாற்றம்.!
தங்க முதலீடு

ஒரு அவுனஸ் என்பது கிட்டத்தட்ட 31.10 கிராம். அதாவது சுமார் 4 சவரன் ஆகும். இப்போதைய விலையை விட 2035-ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின விலை சுமார் 8 மடங்கு உயரும் என ராபர்ட் கியோசாகி கணித்துள்ளார்.

அவருடைய கணிப்பின் படி பார்த்தால் 2035-ல் ஒரு சவரன் தங்க நகை ரூ.9 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகும். இது மட்டும் நடந்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனி தான். இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபத்தைக் கொடுக்கும். அதேசமயம் தங்க நகைகளின் விற்பனை வெகுவாக குறைய அதிக வாய்ப்புள்ளது.

இந்தியாவைப் பொறுத்து வரை திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளின் போது தான் தங்க நகைகளை அதிகமாக வாங்குவார்கள். ஆனால் ஒரு சவரன் ரூ.9 லட்சத்திற்கும் மேல் விற்பனையானால், சாமானிய மக்கள் தங்கம் வாங்கவே அஞ்சுவார்கள்.

தங்கத்தின் விலையேற்றத்தை முதலீடாக பார்த்தால், சாமானியர்களும் அதிக லாபத்தை ஈட்ட முடியும். இப்போதே சிறிது சிறிதாக தங்கத்தை வாங்கி வைத்தால், அது பிற்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

விலை உயர உயர முதலீட்டாளர்களுக்கு லாபம் தான். ஆகையால் சாமானியர்கள் முதலீட்டாளர்களாக மாற வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதே நிதர்சனம்

இதையும் படியுங்கள்:
வேலை மாறினாலும் இனி கவலை வேண்டாம்! ஊழியர்களுக்கு சூப்பரான பென்ஷன் அப்டேட்!
தங்க முதலீடு
logo
Kalki Online
kalkionline.com