
இந்தியாவில் சமீப காலமாக செஸ் விளையாட்டு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமே இளம் வீரர்கள் சர்வதேச அளவில் சாதிப்பது தான். பிரக்ஞானந்தா, முகேஷ், ஆதித்யா மற்றும் திவ்யா தேஷ்முக் வரிசையில் தற்போது இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த செஸ் வீரராக 20 வயதான ரோஹித் கிருஷ்ணாவும் இணைந்துள்ளார். நேற்று கஜகஸ்தானில் அல்மாட்டி மண்டல ஓபன் சர்வதேச செஸ் கோப்பைக்கான போட்டியில் இந்திய வீரர் ரோஹித் கிருஷ்ணா ஆர்மேனியாவைச் சேரந்த ஆர்தர் தவ்த்யனை வென்று இந்தியாவின் 89வது கிராண்ட் மாஸ்டரானார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைச் சேர்ந்த ரோஹித் கிருஷ்ணா, நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் சுவீடனில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடரில் பங்கேற்றார். இத்தொடரில் 9 சுற்றுகளின் முடிவில் 6.5 புள்ளிகளைப் பெற்று கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான முதல் தகுதியை எட்டினார்.
அடுத்ததாக துபாய் ஓபன் செஸ் தொடரில் பங்கேற்று அங்கும் அசத்தினார் இந்த இளம் வீரர். துபாய் ஓபன் தொடரில் 9 சுற்றுகளின் முடிவில் 5.5 புள்ளிகளைப் பெற்று கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான தகுதியை உயர்த்தினார். செஸ் போட்டியின் மீதான ஆர்வமும், பயிற்சியும் தான் இவரை இந்த அளவிற்கு முன்னேற்றி உள்ளது.
கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாட்டியில் மண்டல ஓபன் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதன் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. ரோஹித் கிருஷ்ணா தனது கடைசி சுற்றான 9வது சுற்றில் ஆர்மேனியா நாட்டைச் சேர்ந்த ஆர்தர் தவ்த்யனை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6.0 புள்ளிகளை எடுத்து வெற்றி பெற்று, இந்தத் தொடரில் 8வது இடத்தைப் பிடித்தார்.
இதுதவிர பிடே தரவரிசையிலும் 15.1 புள்ளிகளைப் பெற்று அசத்தினார். இதன்மூலம் சர்வதேச செஸ் அரங்கில் மொத்தம் 2500 போட்டி செயல்திறன் மதிப்பீடுகளைப் பெற்று இந்தியாவின் 89வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார் ரோஹித் கிருஷ்ணா.
இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டரான ரோஹித் கிருஷ்ணாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. இந்த இளம் வீரரை இந்தியாவிற்கு உருவாக்கிக் கொடுத்த பயிற்சியாளர் கே.விஸ்வேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.
கஜகஸ்தான் மண்டல ஓபன் சர்வதேச செஸ் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஆதித்யா 9 சுற்றுகளின் முடிவில் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தை தன்வசம் படுத்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.