
விளையாட்டு வீரர்களின் வெற்றிக்குப் பின்னால் நிச்சயமாக ஒரு பயிற்சியாளர் இருப்பார். வீரர்களின் சோதனைகளை சாதனைகளாக மாற்றுபவரும் பயிற்சியாளர் தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதே ஆன குகேஷ், சமீபத்தில் உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இது உலக அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இன்று குகேஷ் பாராட்டு மழையில் நனைகிறார் என்றால், அதற்கு முதல் காரணம் அவரது பயிற்சியாளரின் சரியான வழிகாட்டுதல் தான் என்பதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும். வெற்றி பெற்ற வீரரைப் போற்றும் நாம், அதற்கு உறுதுணையாக நின்ற பயிற்சியாளரைப் பாராட்ட மறந்து விடுகிறோம். அவ்வகையில் செஸ் சாம்பியன் குகேஷின் பயிற்சியாளர் யார்? அவரது சாதனைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
உலக சாம்பியன் குகேஷின் பயிற்சியாளர் சென்னையைச் சேர்ந்த விஷ்ணு பிரசன்னா. சிறு வயதில் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த விஷ்ணுவை, செஸ் விளையாட்டின் பக்கம் இழுத்தவர் அவரது தாய் தான். இதற்கு உத்வேகம் அளித்தவர் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த். ஆம், கடந்த 2000 ஆம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது, விஷ்ணுவின் தாய்க்கு ஒரு உத்வேகத்தை அளித்தது. தனது மகன் செல்ல வேண்டிய சரியான திசை செஸ் தான் என்று அவர் உறுதியாக நம்பினார்.
தாயின் சொல் கேட்டு, அதீத ஈடுபாட்டுடன் தனது முழு கவனத்தையும் செஸ் விளையாட்டிலேயே செலுத்தினார் விஷ்ணு பிரசன்னா. செஸ் விளையாட்டில் திறம்பட செயல்பட விஸ்வேஷ்வரன் அவர்களிடம் பயிற்சி பெற்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் பங்கேற்றார் விஷ்ணு. இத்தொடரில் அப்போதைய கிராண்ட் மாஸ்டர்களான அதிபன் பாஸ்கரன், ஜே. தீபன் சக்கரவர்த்தி மற்றும் எம். ஷியாம் சுந்தர் ஆகியோரைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தார். விஷ்ணு செஸ் விளையாட்டைத் தொடங்கியது வேண்டுமென்றால் தாமதமாக இருக்கலாம். ஆனால், தொடக்க காலத்திலேயே பல நுணுக்கங்களை கற்றறிந்து கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
எந்த ஒரு வீரரும் ஒரு வெற்றியைப் பெற்று விட்டால், அதனைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக முயற்சிப்பார்கள். அதற்காக அவர்கள் தங்களை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்வார்கள். ஆனால், விஷ்ணு பிரசன்னாவின் வழிமுறை மட்டும் வேறாக இருந்தது. அடுத்தடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டங்களைப் பெற அவர் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க நினைத்தார். இதன் பலனாகத் தான் இன்று உலக செஸ் சாம்பியனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு குகேஷை முதன்முதலில் சந்தித்த விஷ்ணு பிரசன்னா, அவருக்குப் பயிற்சியாளராக மாறினார். அதுவரை செஸ் போட்டியை நன்றாக விளையாடி வந்தாலும், பயிற்சிக்குப் பின்னர் குகேஷின் ஆட்டம் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருந்தது.
தனது பயிற்சியாளர் பணியை விரிவுப்படுத்த வேண்டும் என்று எண்ணிய விஷ்ணு பிரசன்னா, கடந்த நவம்பர் 2022 ஆம் சென்னையில் உள்ள அண்ணா நகரில், தனது மனைவியுடன் இணைந்து செஸ் கிளப்பைத் தொடங்கினார். இந்தியாவின் செஸ் ஆளுமை விஸ்வநாதன் ஆனந்த் தான் இந்த செஸ் கிளப்பைத் திறந்து வைத்தார். பல செஸ் வீரர்களுக்கு பயிற்சியளித்து வரும் இவரது பணி ஒருபோதும் நிற்கப் போவதில்லை; அடுத்தடுத்து பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கப் போகிறது.