RRR பட நடிகர் அதிர்ச்சி மரணம்!

RRR பட நடிகர் அதிர்ச்சி மரணம்!

பிரபல இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட திரைப்படமான RRR படத்தில் வில்லனாக நடித்தவர் ரே ஸ்டீவன்சன். ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இப்படம், உலகளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இவர் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்துக்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் நடிகரான இவருக்கு வயது 58. RRR திரைப்படத்தில் சர் ஸ்காட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்டீவன்சன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு சர்வாதிகாரி எப்படி இருப்பாரோ அதை அனைவரின் கண் முன்னே நிறுத்தி இருப்பார்.

1990களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய இவர், முதல் முறையாக ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்தார். 1998ம் ஆண்டு வெளியான, ‘தி தியரி ஆஃப் ஃப்ளைட்’ என்கிற திரைப்படம்தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் பல்வேறு வெற்றிப் படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் 1997ம் ஆண்டு ரூத் காமெல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான எட்டு ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ‘கேசினோ’ படத்தின் படப்பிடிப்புக்காக இத்தாலி சென்றிருந்த நடிகர் ரே ஸ்டீவன்சன், அங்கு திடீரென மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அடுத்த மூன்று நாட்களில் நடிகர் ஸ்டீவன்சன் தனது 59வது பிறந்த நாளைக் கொண்டாட இருந்த நிலையில் உயிரிழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் குறித்து இரங்கல் தெரிவித்திருக்கும் இயக்குநர் ராஜமௌலி, தனது இரங்கல் செய்தியில், “இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது. ரே மிகவும் ஆற்றல் மிக்கவராக செட்டில் இருப்பார். அவருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என கூறி இருக்கிறார்.

ரே ஸ்டீவன்சனின் மறைவுக்கு ஹாலிவுட் முதற்கொண்டு கோலிவுட் வரை பலரும் தங்களது வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com