

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு பெற்றிருந்தாலும் கூட, இதுவரை ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை. 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதுவரை காங்கிரஸ் மட்டுமே தவெக-விற்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவளித்துள்ளது.
இந்நிலையில் தவெக-வின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளுடனும் தமிழக வெற்றிக் கழகம் பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது.
மூன்று கட்சிகளின் தலைவர்களையும் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
மக்களின் தீர்ப்பை ஏற்று, விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. இதனால் மெரினா கடற்கரை மற்றும் ஆளுநர் மாளிகை முன்பு எண்ணற்ற போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை திட்டமிட்டு வருகிறது.
அதே நேரம் விஜய்க்காக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், விஜய் மட்டும் இது குறித்து இன்னும் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் நேற்று மாலை நடந்த தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் எம்எல்ஏக்கள் அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியன் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்த முக்கிய முடிவு இன்று எடுக்கப்பட உள்ளது.
இந்த மூன்று கட்சிகளும் தலா இரண்டு எம்எல்ஏக்களை வைத்திருப்பதால், 6 எம்எல்ஏக்கள் தவெக-விற்கு ஆதரவளித்தால், விஜய்க்கு தனிப்பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைக்க ஏதுவாக இருக்கும். இதற்கிடையில் நேற்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் நடைபெற்று உள்ளது. இதனால் தவெக-விற்கு அதிமுக ஆதரவாளி குமார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
தவெக எம்எல்ஏ-க்களிடம் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “தவெக-வினர் எதையும் நினைத்து குழம்ப வேண்டாம். விசிக மற்றும்ம் கம்யூனிஸ்ட் கட்சியில் நிச்சயமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் முன்பு மற்ற கட்சிகள் ரூ.10 கோடியை வைத்தாலும், விஜய் போட்டோவை நினைத்து நேர்மையுடன் செயல்படுங்கள்” என அறிவுரைத்தார் புஸ்ஸி ஆனந்த்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க போராடி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி குறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை எனவும், சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.