‘அனைவருக்கும் வீடு’ என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 20 இலட்சம் பேருக்கு வீடு கட்ட தலா ரூ.2.5 இலட்சம் நிதியுதவி அளிக்கத் திட்டமிடப்பட்டது. படிப்படியாக இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பிக்கத் தொடங்கினர்.
பிறகு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நகர்ப்புற வீட்டு வசதி 2.0 திட்டத்தைத் தொடங்கியது மத்திய அரசு. இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 94.11 இலட்சம் வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளைக் கட்டி முடிக்க தற்போது ‘அங்கிகார் 2025’ என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
நாட்டில் வசிக்கும் தொலைதூர மக்களும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி 2.0 திட்டத்தின் கீழ், அங்கிகார் 2025 பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சரான திரு. மனோகர் லால் தொடங்கி வைத்துள்ளார்.
இதன்படி செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 2 மாதங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அங்கிகார் 2025 பிரச்சாரம் நடைபெறும். குறிப்பாக 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொந்த வீடு கட்ட மத்திய அரசால் ரூ.2.5 இலட்சம் நிதியுதவி வழங்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நாடு முழுக்க வீடு வீடாகச் சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியுடன் இந்தப் பிரச்சாரம் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி 2.0 திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பணிகளைத் வேகப்படுத்துவதே அங்கிகார் 2025 பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு வீடு கட்ட கடன் உத்தரவாதத்தையும் இது வழங்கும்.
சொந்த வீடு கட்ட வேண்டும் வேட்கையில் உள்ளவர்கள், மத்திய அரசின் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கெள்ளுங்கள். ஒரு வீடு கட்ட பல இலட்சம் வரை செலவாகும் என்பதால், மத்திய அரசு கொடுக்கும் நிதியுதவி நிச்சயமாக பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.