

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இலவச விபத்துக் காப்பீட்டை செயல்படுத்தி வருகிறது திருவிதாங்கூர் தேவசம்போர்டு. சபரிமலை யாத்திரையின் போது விபத்தில் உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமே இந்தக் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இயற்கை மரணம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் பக்தர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (LIC) கைகோர்த்துள்ள தேவசம்போர்டு, யாத்திரையின் போது விபத்து, மாரடைப்பு மற்றும் இயற்கை மரணமடையும் ஐயப்ப பக்தர்களுக்கு இலவச காப்பீடு வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தக் காப்பீட்டின் படி உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 வட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
சபரிமலையில் தற்போது மண்டல மற்றும் மகர பூஜைக்கான நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு ஆன்லைனில் 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஸ்பாட் புக்கிங்கில் 10,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலை யாத்திரைக்கு மலையேறி வரும் ஐயப்ப பக்தர்களின் நலன் காக்கும் விதமாக இலவச காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இலவச காப்பீடு:
ஐயப்ப பக்தர்கள் இந்தக் காப்பீட்டைப் பெற எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டாம். காப்பீட்டிற்கான முழுப் பிரீமியமான ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரையிலான நிதியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு, தனது நல நிதியில் இருந்து LIC நிறுவனத்திற்கு செலுத்துகிறது.
யாருக்கெல்லாம் பொருந்தும்?
ஆன்லைன் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி, நேரடி முன்பதிவு செய்யும் ஐயப்ப பக்தர்களுக்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும். முன்பதிவு செய்யும் போதே ஐயப்ப பக்தர்களின் நாமினி விவரங்கள் சேகரிக்கப்படும்.
முன்பதிவு செய்யவில்லை என்றால் என்ன செய்வது?
ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தாலும் காப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர் உண்மையான ஐயப்ப பக்தர் தான் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு சான்றளித்தால், LIC நிறுவனம் காப்பீட்டுத் தொகையை விடுவிக்கும்.
காப்பீடு எத்தனை நாட்கள் செயலில் இருக்கும்?
ஐயப்ப பக்தர்கள் மலை ஏறுவதற்கு முந்தைய நாளிலிருந்து காப்பீடு திட்டம் செயலில் இருக்கும். சபரிமலை யாத்திரை முடிந்து பக்தர்கள் தங்கள் வீட்டை அடைந்த பிறகு 3 நாட்கள் வரை காப்பீடு செயலில் இருக்கும். ஐயப்ப பக்தர்கள் வீட்டிற்கு திரும்பினாலும், குறிப்பிட்ட இந்த காலக்கெடுவிற்குள் உயிரிழந்தாலும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
காப்பீட்டைப் பெற ஐயப்ப பக்தர்கள் முன்பதிவின் போது மறக்காமல் நாமினி பெயரை சேர்க்க வேண்டியது அவசியம்.
ஏஐ கேமரா:
காப்பீடு மட்டுமின்றி ஐய்யப்ப பக்தர்களின் நலனுக்காக பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல்லில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.4.5 கோடி செலவில் நவீன ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன