
கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. பதினெட்டு மலைகளுக்கு இடையே இந்த கோயில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயன் எண்ணற்ற அற்புதங்களை தனது பக்தர்களுக்கு நடத்திக் கொண்டுதான் வருகிறார்.
ஐயப்ப வழிபாடு என்பதும் கேரள மாநிலத்தவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு வழிபாட்டு முறையாக இருந்தது. 60 ஆண்டுகளுக்கு முன் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவர் 'ஸ்ரீ ஐயப்பன்' என்ற தலைப்பில் ஐயப்பனின் வரலாற்றையும், வழிபாட்டு முறை பற்றியும் நாடகமாக போட்டு கேரளாவை தாண்டி பிற மாநிலத்தவர்களும் ஐயப்பன் பற்றி தெரிந்து கொள்ள செய்தார்.
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்திருக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை. தை மாதம் நடக்கும் மகரஜோதி தரிசனம், சித்திரை விஷூ போன்ற விழாக்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக சபரிமலையில் குவிகிறார்கள்.
சபரிமலைக்கு மண்டல பூஜையை காண வரும் பக்தர்களை விட பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகரஜோதி தரிசனத்தை காண பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். மகர ஜோதி என்பது, சபரிமலையில் தவக் கோலத்தில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பன், ஆண்டுக்கு ஒருமுறை தனது பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி அளித்து, ஆசி வழங்குவதாக ஐதீகம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்று வந்த மண்டல பூஜை கடந்த டிசம்பர் 26-ந் தேதி நிறைவு பெற்றது.
நடந்து முடிந்த மண்டல சீசனில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல சீசனில் 41 நாட்களில் மொத்த வருமானம் ரூ.297 கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்து 679 ஆகும். மண்டல சீசனில் கடந்த ஆண்டை விட ரூ.82 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 781 கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார். இதில் அரவணை விற்பனை மூலம் ரூ.124 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 950-ம், காணிக்கை மூலம் ரூ.80 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 567-ம் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.