
இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள பாஸ்ட்புட் வாழ்க்கைமுறையால் உடல்பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் இளம் வயதினர் முதல் பெரியோர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் 2050-ம் ஆண்டில் சுமார் 50 கோடி இந்தியர்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சர்க்கரை, எண்ணெய் மற்றும் மாவுச்சத்துள்ள உணவுப் பொருள்களை தவிர்க்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுமுறை, பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை, உடல் செயல்பாடு இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகளும் உடல் பருமனால் அவதிப்படுவதாகவும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரபலமான இந்திய சிற்றுண்டிகளான ‘ஜிலேபி’,‘சமோசா’ இந்த பெயரை கேட்டாலே சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமான சமோசா, ஜிலேபி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் ஆகும். ஆனால் இந்த 2 உணவுகளும் உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமோசாக்கள் மற்றும் ஜிலேபிகள், அவற்றில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளன.
இந்த நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், சமோசா மற்றும் ஜிலேபி போன்ற நொறுக்கு தீனிகள் விற்கப்படும் இடங்களிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு நிறுவனங்கள், உணவகங்கள், பொது இடங்களில் விழப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்களும் விரைவில் இடம்பெறுகின்றன. இது தேவையில்லாத உணவை தவிர்ப்பதற்கான புதிய முயற்சி என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த எச்சரிக்கை பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. உடல்பருமனுக்கு எதிரான முயற்சியில், சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி விற்கும் பாக்கெட்டுகளில் லேபிளில் எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளதாக இந்திய இருதயவியல் சங்கத்தின் தலைவர் அமர் அமலே கூறியுள்ளார்.
சமோசா, ஜிலேபி பிரியர்களுக்கு இது கஷ்டமாக தெரியலாம், ஆனால் நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள்.
"புத்திசாலித்தனமாக சாப்பிடுங்கள். உங்கள் எதிர்காலம் (எதிர்கால ஆரோக்கியம்) உங்களுக்கு நன்றி சொல்லும்."