கோடையில் டீ, காபிக்கு 'டாட்டா' சொல்லுங்க! சுகாதாரத் துறை எச்சரிக்கை.!

Avoid Tea coffe in Summer
Summer
Updated on

பொதுமக்கள் பலரும் அடிக்கடி அருந்தும் பானங்களில் டீ, காபிக்கு தான் என்றுமே முதலிடம். ஒரு சிலருக்கு டீ, காபி குடித்தால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்ற அளவிற்கு, அதன் மீதான ப்ரியம் அதிகம்.

சில நேரங்களில் தலைவலிக்கு அருமருந்தாக டீ, காபியை பயன்படுத்தி வரும் பொதுமக்கள், தினசரி பயன்பாட்டில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இருப்பினும் காலநிலைக்கு ஏற்ப டீ, காபி குடிப்பதை அவ்வப்போது குறைத்துக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் டீ, காபியை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்ட சூழலில், தற்போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.

கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் வழக்கமாக குடிப்பதை காட்டிலும், அதிக அளவு தண்ணீரை அருந்த வேண்டும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கோடை வெயிலை சமாளிக்க பலரும் குளிர்பானங்களை அருந்துவது வழக்கம். குளிர்பானங்களைக் காட்டிலும் இளநீர், மோர், நுங்கு மற்றும் பதநீர் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை தரும். குறிப்பாக கோடையில் அதிக அளவு தண்ணீரை குடிப்பது நமது உடல் சூட்டைக் குறைக்க உதவும். இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, சில வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை வெளியிட்ட வழிகாட்டுதல்கள்:

* கோடை காலத்தில் வெப்பம் சார்ந்த நோய்களைத் தவிர்க்க டீ மற்றும் காபி குடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

* கோடையில் நீர்ச் சத்து குறைபாடு ஏற்படும் என்பதால், வழக்கத்தை விடவும் கூடுதலாக தண்ணீரை குடிக்க வேண்டும்.

* உப்பு - சா்க்கரை நீர்க் கரைசல் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை உடலில் நீா்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

* உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் இளநீர் மற்றும் மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது.

* அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்.

* குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* வெளியில் செல்லும் போது, குடைகள் மற்றும் தொப்பிகளை பயன்படுத்துவது, அனல் காற்றில் இருந்து ஓரளவு பாதுகாப்பை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு.! முதல்வர் அறிவிப்பு.!
Avoid Tea coffe in Summer

* திட்டமிட்டு பயணங்களை மேற்கொள்வதன் மூலம், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

* காய்கறிகள், பருவகால பழங்கள் மற்றும் நாா்ச் சத்துள்ள பொருள்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

* காற்றோட்டம் நிறைந்த இடங்களில் வசித்தல் அவசியம்.

* மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், சரும நோய்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.

* மூத்த குடிமக்களுக்கு கோடை வெயில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

உதவி எண்:

கோடை காலத்தில் அவசர உதவிக்கும், ஆலோசனை பெறவும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் உதவி மையத்தை 104 என்ற இலவச எண்ணின் மூலம் பொதுமக்கள் அழைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை 2 நிமிடங்களில் சரிபார்ப்பது எப்படி.? முழு வழிகாட்டி..!
Avoid Tea coffe in Summer
logo
Kalki Online
kalkionline.com