

இந்தியாவின் முன்னணி வங்கிச் சேவை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா- எஸ்பிஐ (SBI) தங்களுடைய கிரெடிட் கார்டுகளில் வழங்கி வந்த பல்வேறு பலன்களை மாற்றி அமைத்திருக்கிறது. இந்த மாற்றங்கள் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரெடிட் கார்டு விநியோக நிறுவனமாக எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ கார்டு பயனர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எஸ்பிஐ கார்டு நிறுவனம் தனது பிரபலமான மற்றும் பிரீமியம் கிரெடிட் கார்டுகளுக்கான வெகுமதிப் புள்ளிகள் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு வெகுமதிப் புள்ளிகள் பெறுவதில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 1-ம்தேதி முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் வரவுள்ள இந்த மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் ஷாப்பிங், காப்பீட்டுக் கட்டணங்கள், பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இந்த அட்டைகளை அடிக்கடி பயன்படுத்தும் அட்டைதாரர்களை இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ தனது பிரீமியம் கார்டுகளுக்கான, குறிப்பாக PhonePe போன்ற ஃபின்டெக் தளங்களுடன் இணைந்து வழங்கப்படும் கார்டுகளுக்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது. 'PhonePe SBI Credit Card PURPLE' மற்றும் 'PhonePe SBI Credit Card SELECT BLACK' போன்ற கார்டுகளுக்கு இனி அதிகபட்ச மாதந்தோறும் வெகுமதிப் புள்ளிகளை பெறுவதில் உச்சவரம்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் அல்லது பயன்பாட்டுக் கட்டணங்களை (utility bills) செலுத்தும்போது ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தினால் அந்த வரம்பைத் தாண்டிய பிறகு கூடுதல் வெகுமதிப் புள்ளிகள் எதுவும் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு பிரீமியம் செலவு மற்றும் பிற செலவின வகைகளுக்குத் தனித்தனி வரம்புகள் இருக்கும். மேலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பெறப்படும் அதிகபட்ச வெகுமதிப் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது ஆன்லைன் செலவினங்களுக்கான மாதாந்திர வெகுமதிப் புள்ளி வரம்பு 2,000 புள்ளிகளிலிருந்து 1,000 புள்ளிகளாகக் குறைக்கப்படும்.
எஸ்பிஐ வங்கி தனது வெகுமதிப் புள்ளி பட்டியலிலிருந்து சில வகைகளை முழுமையாக நீக்கியதுடன், சில வகைகளை கட்டுப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் வாலட்களில் பணம் ஏற்றுவதற்கோ அல்லது கிரெடிட் கார்டு மூலம் வீடு/கடை வாடகை செலுத்துவதற்கோ இனி வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. அரசு வரிகள் அல்லது கட்டணங்களைச் செலுத்துவது போன்ற அரசு சேவைகளுக்கான ரிவார்டுகளும் சில கார்டுகளில் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைக்கப்பட்டுள்ளது.
PhonePe வழியாக மேற்கொள்ளப்படும் மற்ற தகுதியான பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு 1,500 வெகுமதிப் புள்ளிகள் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் PhonePe மூலம் செய்யப்படும் காப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கு இனி 500 வெகுமதிப் புள்ளிகள் என்ற தனி மாதாந்திர வரம்பு இருக்கும்.
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அவ்வப்போது மேற்கொள்ளும் இந்த ரிவார்டு மதிப்பு குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
பல பயனர்கள் தனிப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பெரிய வணிகப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தி, கணிசமான வெகுமதிப் புள்ளிகளை பெற்று வந்த நிலையில் இந்த இடைவெளியை குறைப்பதற்காகவே இந்த உச்சவரம்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வணிகர் தள்ளுபடி விகிதங்கள் (MDRs) மற்றும் பிற நிதி அளவீடுகளைச் சமநிலைப்படுத்த வங்கிகள் தங்கள் ரிவார்டு கட்டமைப்புகளை அடிக்கடி மாற்றியமைக்கின்றன.
சில வகை செலவினங்களுக்கு, அதாவது, கல்வி நிறுவனங்களுக்குச் செய்யப்படும் கொடுப்பனவுகள், சுங்க கட்டணங்கள், நகைகள் வாங்குதல், பரிசு அட்டைகள் மற்றும் பரிசு வவுச்சர்கள் வாங்குதல், PhonePe தளத்திற்கு வெளியே செய்யப்படும் பயன்பாட்டுக் கட்டணங்கள், PhonePe-க்கு வெளியே செய்யப்படும் காப்பீட்டு பிரீமியம் செலுத்துதல்கள், PhonePe அல்லாத பிற செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு வெகுமதிப் புள்ளிகள் பெறுவது முற்றிலும் தகுதியற்றதாகிவிடும்.
எனவே, உங்கள் கணக்கில் ஏற்கனவே அதிக அளவிலான வெகுமதிப் புள்ளிகள் சேர்ந்திருந்தால் புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதற்கு உங்கள் மொபைல் போனில் SBI Card செயலியைத் திறந்து 'Rewards' பகுதிக்கு சென்று இந்த வெகுமதிப் புள்ளிகளை பயன்படுத்தி நீங்கள் இ-கிஃப்ட் வவுச்சர்களைப் (gift voucher - Amazon, Flipkart) பெறலாம். ஹோட்டல்/விமான முன்பதிவுகளைச் செய்யலாம் அல்லது உங்கள் கிரெடிட் கார்டின் நிலுவைக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்தலாம்.
விதிமுறைகள் மாறினாலும் புத்திசாலித்தனமான திட்டமிடுவதன் மூலம் உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து தொடர்ந்து அதிகபட்ச பலன்களைப் பெற முடியும். உங்கள் மாதாந்திர ரிவார்டு வரம்பை மீறிவிட்டீர்களா என்பதை அறிய ஒவ்வொரு மாதமும் உங்கள் கார்டு ஸ்டேட்மெண்ட் அல்லது செயலியைச் சரிபார்த்து கொள்ளலாம். பெரிய செலவுகளுக்கு ரிவார்டுகளை இழப்பதைத் தவிர்க்க, குடும்பத்தில் உள்ள வேறொருவரின் கார்டையோ அல்லது வேறொரு வங்கியின் கார்டையோ பயன்படுத்தலாம் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் PhonePe எஸ்பிஜ கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய மற்ற அனைத்துப் பலன்கள், அம்சங்கள் மற்றும் வெகுமதிப் புள்ளிகள் திரட்டும் வழிமுறைகள் மாற்றமின்றித் தொடரும் என்று எஸ்பிஜ கிரெடிட் கார்டு தெளிவுபடுத்தியுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.