

இந்தியாவின் முன்னணி வங்கிகளான SBI, ICICI, HDFC, மற்றும் PNB தங்களது சேவைக்கட்டணங்கள் மற்றும் விதிகளில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 15-ம்தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. இந்த 4 வங்கிகளில் நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இனி உங்கள் சம்பளத்தில் இருந்து நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு ரூபாய்க்கும் புதிய கட்டணம், லிமிட் வர உள்ளது. வாடிக்கையாளர்களே மிகவும் கவனமாக இந்த மாற்றங்களை மனதில் கொண்டு உங்கள் பணத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள். பிப்ரவரி 2026-ல் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன, இந்த மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும், மற்றும் அவை உங்களை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றிய தெளிவான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி IMPS பணப்பரிமாற்றத்திற்கான சேவை கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது. அதாவது IMPS பணப்பரிவர்த்தனைக்கு பிப்ரவரி 15 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ரூ.25,000 வரைக்கான பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. அதுவே ரூ. 25,000-க்கு மேல் மற்றும் ரூ. 1 லட்சம் வரையிலான ஆன்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் சேவை கட்டணம் ரூ. 2 மற்றும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ரூ. 1 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ. 2 லட்சம் வரையிலான ஆன்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு இனி ரூ. 6 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதேபோல், ரூ. 2 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ. 5 லட்சம் வரையிலான தொகைகளுக்கு, ஆன்லைன் IMPS பரிவர்த்தனை சேவை கட்டணங்கள் ரூ. 10 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி:
பிப்ரவரி 1-ம்தேதியில் இருந்து கிரெடிட் கார்டு பயனர்களுக்கான சில சலுகைகளை மாற்றியமைத்துள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. அதாவது, சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த இலவச சினிமா டிக்கெட்(புக் மை ஷோ) சலுகையை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிறுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கும் போக்குவரத்து செலவுகளுக்கும் உங்களது கார்டில் வழக்கமாக கிடைக்கக்கூடிய ரிவார்டு பாயிண்டுகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிமேல் உங்களது கார்டை உபயோகிக்கும் போது உங்களது ரிவார்டு பாயிண்டை சரிபார்த்து கொள்வது நல்லது.
எச்.டி.எஃப்.சி. வங்கி:
இந்த வங்கியும் தனது கிரெட் கார்டில் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுபாட்டை விதித்துள்ளது. குறிப்பாக எச்.டி.எஃப்.சி. வங்கியின் மிகவும் பாப்புலரான பிரீமியம் கார்டான 'Infinia Metal' கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லிமிட் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது உங்களிடம் இருக்கும் ரிவார்டு பாயிண்டுகளை மாதத்திற்கு 5 முறை மட்டுமே பயன்படுத்தி பொருட்களை வாங்கவோ அல்லது வவுச்சர்களாக மாற்றவோ முடியும். அதற்கு மேல் ரிவார்டு பாயிண்டை மீட்டெடுக்க முடியாது என்று வங்கி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி தங்களின் KYC தகவல்களைப் புதுப்பிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உங்கள் வங்கி கணக்கிற்கான கே.ஒய்.சி. விவரங்கள் 2025 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்திருந்தால் அதை வரும் பிப்ரவரி 2-ம்தேதிக்குள் கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஒருவேளை நீங்கள் கே.ஒய்.சி. அப்டேட் செய்ய மறந்து விட்டால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கோ, யாருக்காவது அனுப்புவதற்கோ தடை விதிக்கப்படலாம். எனவே உடனடியாக உங்களது வங்கி கிளை அல்லது ஆன்லைன் மூலமாக கே.ஒய்.சி. ஐ அப்டேட் செய்து விடுவது சிக்கல்களை தவிர்க்க உதவும்.
எனவே இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு உங்கள் பணத்தை சேமித்திடுங்கள்.